காவிரி நீர் கை கொடுக்காத நிலையில் வைகையும் இழுபறியால் மக்கள் தவிப்பு

இளையான்குடி பேரூராட்சி 18 வார்டுகளில்உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் அவ்வப்போது குழாய் உடைந்து குடிநீர் விநியோகம் அடிக்கடி பாதிக்கப்பட்டது.மாதத்திற்கு ஒரு முறை தண்ணீர் வருவதே சிரமமாக உள்ளது.

இப்பிரச்னையை சீரமைக்க கடந்த ஆண்டு மத்திய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 28 கோடி மதிப்பில் பரமக்குடி வைகை ஆற்றிலிருந்து இளையான்குடிக்கு குடிநீர் கொண்டு வரும் பணி துவங்கப்பட்டது.

ஆனால் இத் திட்ட பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதோடு ஆங்காங்கே கிணறு அமைப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. இது தொடர்பாக 2 முறை சமாதான கூட்டம் நடத்தியும் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வருமா என மக்கள் சந்தேகத்தில் உள்ளனர்.

வைகை ஆற்றிலிருந்து குழாய்களை கொண்டு வரும் மெயின் லைனில் கூட இன்னும் குழாய் பதிக்கப்படாமல் உள்ளது. ஆனால் அனைத்து தெருக்களிலும் குழாய்கள் பதிப்பதாக கூறி தோண்டப்பட்டு ரோடு சீரமைக்கப்படாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய குடிநீர் திட்ட பணியை விரைவு படுத்தி மக்கள் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Advertisement