ஓய்வு பெற்ற நீதிபதியிடம் தகராறு; மத போதகர்கள் நால்வர் சஸ்பெண்ட்

16

துாத்துக்குடி: ஓய்வு பெற்ற நீதிபதியின் காரை வழிமறித்து தகராறு செய்ததால், நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக, கிறிஸ்துவ மத போதகர்கள் நான்கு பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


தென்னிந்திய திருச்சபையின் கீழ் செயல்படும், டயோசீசன் எனப்படும் துாத்துக்குடி- நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி கவனித்து வருகிறார். இந்நிலையில், மே 8ம் தேதி துாத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள டயோசீசன் அலுவலக வளாகத்தில் ஜோதிமணியின் காரை வழிமறித்து மத போதகர்கள் சிலர் தகராறு செய்தனர்.
பிஷப் செல்லையாவின் காரையும் அவர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், ஜோதிமணியின் உதவியாளர் கருணாகரன் என்பவர் தாக்கப்பட்டார். துாத்துக்குடி ஏ.எஸ்.பி., மதனிடம் அவர் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், மத போதகர்கள் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி நேற்று உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத போதகர்கள் டேவிட்ராஜ், லிவிங்ஸ்டன், ஹாரிஸ், ராபின் ஜெயபிரகாசம் ஆகியோர் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால், அவர்கள் நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் வாழ்வாதார உதவித்தொகை தொடர்பான உத்தரவுகள் உரிய நேரத்தில் பிறப்பிக்கப்படும். அவர்கள் கவனித்து வந்த சர்ச் பணிகளை உதவி மத போதகர்கள் கவனித்து கொள்வர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement