பொன்முடி முன்னிலையில் எம்.எல்.ஏ., கொந்தளிப்பு; வெட்ட வெளிச்சம் ஆனது கோஷ்டிப்பூசல்

7

- நமது நிருபர் -


முன்னாள் அமைச்சர் பொன்முடி முன்னிலையில், விக்கிரவாண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, கட்சி நிர்வாகிகள் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்தது, விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வில் உள்ள, கோஷ்டிப் பூசலை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.


விழுப்புரம் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், அம்மாவட்டத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், சமீபத்தில் நடந்தது. மாவட்டப் பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


கூட்டத்தில் அன்னியூர் சிவா பேசியதாவது: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஒரு குணம் உண்டு. அரசியல் ரீதியாக அவருடன் கூட இருப்பவர்கள் என்ன சொல்கின்றனரோ, அதையே நம்புவார். இனிமேல் அப்படி இருக்க மாட்டார் என நான் நம்புகிறேன். கடந்த 1993ம் ஆண்டு, 'தி.மு.க., விவசாய அணி மாநிலச் செயலர் பதவியை வாங்குங்கள்' என, பொன்முடியிடம், நான்தான் கூறினேன். அப்போது அவருக்கு நான் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன்.



கடந்த 1993ல், தி.மு.க.,வில் இருந்து ம.தி.மு.க.,விற்கு சிலர் ஓட்டம் பிடித்த சோதனையான நேரத்தில், பொன்முடியுடன் பயணித்தேன். ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்துக்கு திரும்பினர். ஆனால் அவர்கள், கட்சிப் பணிகளில் அக்கறை செலுத்துவதில்லை. இடைத்தேர்தலில் நான் வெற்றி பெற்றதும் கடந்த ஒன்பது மாதங்களில், தொகுதி வளர்ச்சி திட்டங்களை பொன்முடி உறுதுணையுடன் செயல்படுத்தி இருக்கிறேன்.


ஆனால் ஒன்றிய நிர்வாகிகள், தொகுதி வளர்ச்சி பணிகளுக்காக, எந்த ஒரு கோரிக்கையையும் என்னிடம் கொடுக்கவில்லை. எதற்கும் ஒத்துழைப்பு தருவதில்லை. அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் குறித்து, நான் இதுவரை எந்த புகாரும் கட்சி தலைமையிடம் தெரிவிக்கவில்லை. வரும் சட்டசபை தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில் நான்தான் போட்டியிட வேண்டும் என்பதில்லை; யார் போட்டியிட்டாலும், அவர்கள் வெற்றிக்காக நானும் பாடுபடுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.



தொடர்ந்து பொன்முடி பேசுகையில், “வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று நிரந்தர முதல்வராக, ஸ்டாலின் வர வேண்டும். அதற்காக, வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். யார், யாருடன் கூட்டணிக்கு போனாலும், ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். முதல்வர் ஸ்டாலினின் நான்கு ஆண்டு சாதனைகளை, மக்கள் மறக்க தயாராக இல்லை,” என்றார்.


அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பேசியது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க.,வில், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி என, இரு சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி, மாவட்டப் பொறுப்பாளராக உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில், திருக்கோவிலுாரில் பொன்முடி போட்டியிடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவரது மகன் கவுதமசிகாமணி போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்தால், கவுதமசிகாமணி அமைச்சராகும் வாய்ப்புள்ளது. தற்போது விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் செல்வா, விவசாயத் தொழிலாளர் அணி மாநிலச் செயலர் என்பதால், அவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட, முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பு அளித்தார். பொன்முடியோ, அவைத்தலைவர் ஜெயச்சந்திரனை வேட்பாளராக பரிந்துரைத்தார்.



ஆனால், அன்னியூர் சிவா போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆகியுள்ளதால், பொன்முடி ஆதரவு நிர்வாகிகள், அவருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. இதைத்தான் பொன்முடி முன்னிலையில், சிவா எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement