ஒரே நாளில் பசுமை வழிச்சாலை கருத்து கேட்பு; விவசாயிகள் கோரிக்கை

அன்னுார்; கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், குரும்பபாளையத்தில் துவங்கி, அன்னுார், புளியம்பட்டி, சத்தி வழியாக, கர்நாடக எல்லை வரை, ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக பசுமை புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 14 வருவாய் கிராமங்களை சேர்ந்த ஆட்சேபனை தெரிவித்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் வருகிற 14ம் தேதி அன்னுார் தாலுகா அலுவலகத்தில் துவங்குகிறது. 14, 16, 19, 23 உள்ளிட்ட நாட்களில் நடைபெற உள்ளது.

இது குறித்து கொங்கு மண்டல விவசாயிகள் நல சங்கத் தலைவர் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கை :

ஒரே நாளில் 14 வருவாய் கிராமங்களையும் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அழைத்து கருத்து கேட்டால், உரிய முடிவு விரைவில் தெரியும். அதிகாரிகளின் விளக்கம் மற்றும் விவசாயிகளின் சந்தேகம், கோரிக்கை ஒரே நேரத்தில் தெரிய வரும். எனவே அதிகாரிகள் கருத்து கேட்பு கூட்டத்தை ஒரே நாளில் நடத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement