திருப்புல்லாணி மற்றும் கடலாடி ஒன்றியத்திற்கு அடிப்படை வசதி தேவை

திருப்புல்லாணி: திருப்புல்லாணி மற்றும் கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் குடிநீர், சாக்கடை வசதி, தெருவிளக்கு பழுது போன்ற கோரிக்கைகளை செய்வதற்கு கூட மனமின்றி தனி அலுவலர்கள் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

திருப்புல்லாணி, கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் செயலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜன. 5ல் இருந்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு யூனியனின் உள்ள தனி அலுவலர்கள் மற்றும் மண்டல துணை பி.டி.ஓ., மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், கணக்காளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பணிகளை மேற் கொள்கின்றனர்.

பெருவாரியான ஊராட்சிகளில் பொதுமக்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை செய்வதற்கு கூட மனமில்லாத நிலை தனி அலுவலர்களிடம் தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

கடலாடியைச் சேர்ந்த பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகரபாண்டியன் கூறுகையில், குறிப்பாக ஊராட்சியில் சேகரமாகும் குப்பை உடனுக்குடன் அகற்றப்படாமல் ஊராட்சிகளில் சாலையோரத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பையால் சுகாதாரக் கேடு உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தால் இவற்றை அகற்றுவதற்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.

தனி அலுவலர்கள் மனது வைத்தால் மட்டுமே ஒவ்வொன்றாக பணிகள் நிறைவேற்றப்படும் என்கின்றனர். திருப்புல்லாணி யூனியன் உட்பட்ட பல கிராமங்களில் சமுதாய கழிப்பறைகள் பயன்பாடு இன்றி பூட்டியே வைத்துள்ளனர்.

கிராம சாலைகளின் இருபுறமும் வளர்ந்துள்ள சீமை கருவேலே மரங்களை அகற்ற கூட வழியில்லாத நிலை பல ஊராட்சிகளில் தொடர்கிறது.

வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பசுமை திட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்தல், குடிநீர் இணைப்புகளை உடனுக்குடன் வழங்குகின்றனர். தனி அலுவலர்கள் மூலம் நடத்தக்கூடிய நிர்வாகத்தில் பாரபட்சம் காட்டுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே ஊராட்சிகளில் பொதுமக்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்திட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.

Advertisement