தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்; தினகரன் குற்றச்சாட்டு

சாத்துார் : ''இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது'' என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் குற்றம் சாட்டினார்.
சாத்துாரில் நடந்த கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் ரூ.5000, ரூ.10,000 பெற்றுக்கொண்டு கொலை செய்யும் கூலிப்படையினராக மாறி வருகின்றனர். இந்தியா -பாகிஸ்தான் போரில் மனித உயிர்கள் பலியாகக்கூடாது என்பதற்காக வல்லரசு நாடுகள் சமாதானம் பேசுவது இயல்புதான். இந்தியா வல்லரசாக வளர்ந்து வருகிறது.
தீய சக்தியான தி.மு.க.,வை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டும். 234 தொகுதிகளிலும் யார் யார் போட்டியிட வேண்டும் என்பதை கூட்டணி கட்சிகள் சேர்ந்து முடிவெடுத்து அறிவிப்பர்.
'மிசா' காலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்த தி.மு.க., பின்னர் 'நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக' எனக்கூறி அக்கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லையா. அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததை விமர்சிக்கலாமா.
முதல்வர் ஸ்டாலின் நடத்திய பேரணி ராணுவத்துக்கு ஆதரவு என்று கூறினாலும் மத்திய அரசு தானே ராணுவத்தை இயக்குகிறது. ஆதரவை அரசிற்கு தெரிவிக்க முடியாது என்பதால் ராணுவத்துக்கு என்று கூறுகிறார்கள். இவ்வாறு கூறினார்.