விலைக்கு வாங்கப்பட்ட குழந்தைக்கு போலி பிறப்பு சான்று வினியோகம்; அரசு ஊழியர்கள் உட்பட 9 பேர் கைது

காரைக்கால்; குழந்தையை விலைக்கு வாங்கி, போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்தது தொடர்பாக, மூன்று பெண்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த கருக்கங்குடி கிராமத்தில், குழந்தை இல்லாத பெண் ஒருவர் வீட்டில் திடீரென குழந்தை இருந்தது. புகாரின்படி, குழந்தைகள் நல அமைப்பினர், சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண்ணின் மாமனார், மாமியார், தங்கள் மருமகளுக்கு பிறந்த குழந்தை என, பிறப்பு சான்றிதழை காண்பித்தனர்.
சான்றை ஆய்வு செய்ததில், அது போலி என, தெரியவந்தது. குழந்தையை அந்த வீட்டில் இருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த குழந்தைகள் நல அலுவலர், போலீசில் புகார் செய்தார்.
திருநள்ளாறு போலீசார் விசாரணையில், மருமகளுக்கு குழந்தை இல்லாததால், மூத்த தம்பதி, புரோக்கர்கள் உதவியுடன் தமிழக பகுதியில், 50,000 ரூபாய்க்கு பெண் குழந்தையை விலைக்கு வாங்கி, மருமகளிடம் கொடுத்து வளர்த்து வந்தது தெரிந்தது. மேலும், அந்த குழந்தை தங்கள் மருமகளுக்கு பிறந்தது போன்று, 15,000 ரூபாய் பணம் கொடுத்து, போலி பிறப்பு சான்றிதழ் பெற்றிருப்பது தெரிய வந்தது.
குழந்தையை விலைக்கு வாங்கிய, கருக்கங்குடி சதாசிவம், 65, அவரது மனைவி லட்சுமி, 58, குழந்தைக்கு போலி பிறப்பு சான்றிதழ் வாங்க உதவிய மயிலாடுதுறை ஜியாவுதீன், 48, அரசு மருத்துவமனை ஊழியர் திருநகர் பஞ்சமூர்த்தி, 50, வினோத், 44, நகராட்சி ஊழியர் சந்திரசேகரன், 54, உட்பட 9 பேரை போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.