ஏர்போர்டில் புகுந்த பாம்பு அலறியடித்து பயணியர் ஓட்டம்

சென்னை:சென்னையைச் சேர்ந்தவர் விஜய். மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் பணிபுரியும் இவர், விடுமுறைக்காக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் வழக்கமான சோதனை முடித்து வெளியே வந்த விஜயின் உடைமைகளை, அவரது உறவினர்கள் காரில் எடுத்து வைக்க முயன்றனர்.
அப்போது, விஜயின் சூட்கேஸ் மேல் மூன்றரை அடி நீளமுள்ள நல்லபாம்பு இருப்பதை கண்டு, உறவினர்கள் மற்றும் அங்கிருந்த பயணியர், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, பாம்பை மீட்க, வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனதால், விஜய்யின் உறவினர்கள் செய்வதறியாது தவித்தனர்.
அவர்கள் வந்து பாம்பை பிடித்து, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
