மக்கள் குறைகளுக்கு உடனடித் தீர்வு வருவாய் தீர்வாயம் 20ம் தேதி துவக்கம்
திருப்பூர் ; திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களிலும், வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி, வரும் 20ம் தேதி துவங்குகிறது. இதற்காக, தாலுகா வாரியாக ஜமாபந்தி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 'மக்கள் குறைகளுக்கு உடனடித்தீர்வு காணப்படும்' என்றனர் அதிகாரிகள்.
வருவாய்த்துறையில் வரவு - செலவு கணக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்வதற்காக, ஆண்டுதோறும் ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களிலும், 1434ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி, வரும் 20ம் தேதி துவங்குகிறது.
ஒவ்வொரு தாலுகாவுக்கும், மேல் தணிக்கை அலுவலர், மேல் தணிக்கை உதவியாளர்கள் அடங்கிய ஜமாபந்தி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தாராபுரம் தாலுகாவில், 71 கிராமங்களுக்கான ஜமாபந்தி, கலெக்டர் தலைமையில், வரும் 20ல் துவங்கி 30ம் தேதி வரை; திருப்பூர் தெற்கு தாலுகாவில், 16 கிராமங்களுக்கான ஜமாபந்தி, டி.ஆர்.ஓ., தலைமையில், வரும் 20ல் துவங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
அவிநாசியில், 41 கிராமங்களுக்கு, திருப்பூர் ஆர்.டி.ஓ., தலைமையில், 20 முதல் 27ம் தேதி வரை; திருப்பூர் வடக்கு தாலுகாவில், 7 கிராமங்களுக்கு, 20 முதல் 22ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும்.
ஊத்துக்குளியில், 49 கிராமங்களுக்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், 20ல் துவங்கி 27ம் தேதி வரை; பல்லடத்தில், 29 கிராமங்களுக்கு, 20ல் துவங்கி 27ம் தேதி வரை; காங்கயத்தில், 44 கிராமங்களுக்கு, 20ல் துவங்கி 27ம் தேதி வரை; மடத்துக்குளத்தில், 18 கிராமங்களுக்கு, 20 ல் துவங்கி 22ம் தேதி வரை; உடுமலையில் 75 கிராமங்களுக்கு, 20ல் துவங்கி 28ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.
நடைபெறாத நாட்கள்
வார விடுமுறை நாட்கள், மே 21ம் தேதி மற்றும் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும் திங்கட்கிழமைகளில் ஜமாபந்தி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளித்தால்தீர்வு பெறலாம்
நில உரிமையாளர் விவரம் அடங்கிய 'அ' பதிவேடு, விவசாய சாகுபடி பதிவான அடங்கல்; புறம்போக்குஆக்கிரமிப்பு விவரம்; நிலம் வகை மாற்றம் செய்து பட்டா வழங்கியது; நில ஆவணங்களில் செய்த திருத்தங்கள் உள்பட பல்வேறுவகையான விவரங்கள், ஜமாபந்தி அலுவலரால் சரிபார்க்கப்படும்.
அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று, ஜமாபந்தி அலுவலர்களிடம் நேரடியாக, அனைத்துவகை கோரிக்கை மனுக்களையும் அளித்து, உடனடி தீர்வு பெறலாம்.
24 வகை
பதிவேடுகள் சரிபார்ப்பு
ஜமாபந்தியில், நில அளவைக்கு பயன்படுத்தப்படும் கோணக்கட்டை, சங்கிலிகள் கொண்டுவரப்பட்டு, அவை சரியான அளவில் உள்ளனவா என சரிபார்க்கப்படும். ஜமாபந்தி அலுவலர்களால், கிராம வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும். வருவாய்த்துறை பராமரிக்கும் 24 வகை பதிவேடுகள் சரிபார்க்கப்படும்.
குறைபாடு கண்டறியப்பட்டால்
நடவடிக்கை: கலெக்டர் அதிரடி
அனைத்து தாசில்தார்களும், தங்களுக்கு உட்பட்ட கிராமங்களின் கிராம கணக்குகள் அனைத்தும் முழுமையாக எழுதப்பட்டதற்கான சான்றை, வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்; புறம்போக்கு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அபராதம் முழுமையாக வசூலிக்கப்பட்டதற்கான சான்றை, வருவாய் தீர்வாய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும். தாலுகா அளவில் கிராம கணக்குகள் தணிக்கைக்கு தாக்கல் செய்யப்பட்டு, மேல் தணிக்கையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.