போலீஸ் செய்திகள்..
மண் கடத்திய லாரி பறிமுதல்
தேனி: பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் தலைமையில், தேனி மண்டல துணை தாசில்தார் ராஜாராம் உள்ளிட்டோர் அன்னஞ்சி விலக்கு பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக லாரியை சோதனை செய்தனர். லாரியில் அனுமதியின்றி ரூ.3ஆயிரம் மதிப்பிலான 3 யூனிட் மண் அள்ளி வந்தது தெரிந்தது. லாரியை அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷனில் விட்டு டிரைவர் சந்திரன், லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர். அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
கொத்தனார் தற்கொலை
தேனி: அல்லிநகரம் மச்சால் தெரு கோவிந்தன் 29, கொத்தனார். மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதனை வீட்டில் தெரிவித்தார். குடும்பத்தினர் அல்லிநகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தன் ஏற்கனவே, இறந்த விட்டதாக தெரிவித்தனர். இவரது தாயார் செல்வி புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் நால்வர் காயம்
தேனி: திண்டுக்கல் மல்லையாபுரம் அழகர். இவரது உறவினர்கள் பூதிப்புரம் அருகே விருசின்னமாள் புரத்தில் உள்ளனர். இவர்களுடன் பூதிப்புரம் வழியாக வீரபாண்டி கோயில் திருவிழாவிற்கு ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை கம்பம் புதுப்பட்டி மணிவண்ணன் ஓட்டினார்.
பூதிப்புரம் பழனிசெட்டிபட்டி ரோட்டில் ஆட்டோ வந்த போது, தேனி வி.ஐ.பி., நகர் ஆனந்த் 33, ஓட்டி வந்த கார் ஆட்டோவில் மோதியது. இந்த விபத்தில் அழகர், இவரது உறவினர்கள் மகேஸ்வரி, பெருமாள்அக்கா, ஆட்டோ டிரைவர் மணிவண்ணன் காயமடைந்தனர். சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் மூதாட்டி பலி
தேனி: போடி வினோபாஜி காலனி பொன்னுத்தாய் 79. இவர் குடும்பத்துடன் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நடந்த, விருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். சாப்பிட்டு விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்ப வில்லை. உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் கோட்டூர் பெட்ரோல் பங்க் அருகே மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டது தெரிந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மகன் ராமச்சந்திரன் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.