ஓரம் கட்டப்படும் நிலையிலும் ஓடிக் கொண்டிருக்கும் பஸ்கள்

மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்பும் சிட்டி பஸ்கள் பண்டிகை காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றன.

தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் மோசமான நிலையில் இயங்குவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதில் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டும் விதிவிலக்கல்ல. மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் உருவான பிறகு அங்கிருந்து புறநகர் பஸ்களும், பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிட்டி பஸ்களும் இயக்கப்படுகின்றன.

சுற்றுவட்டார பகுதிக்கு இயக்கப்படும் சிட்டி பஸ்கள் மதிய நேரங்களில் சரியான நேரத்திற்கு வராததால் பயணிகள் கோடை வெயிலில் அவதிப்படுகின்றனர். பழைய பஸ்கள் என்பதால், சில பஸ்களில் இன்ஜினை ஆன்செய்து வைத்து விட்டு டிரைவர்கள் சாவகாசமாக கிளம்புகின்றனர். பஸ் கிளம்பும் என பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து புலம்புகின்றனர். வெயில் நேரத்தில் தானியங்கி கதவுகள் மூடப்பட்டு ஜன்னல்களும் சரி வர திறக்காததால் காற்றோட்டம் இன்றி வெயிலில் வேகும் நிலை உள்ளது.

சில சிட்டி பஸ்கள் நிறுத்தங்களில் நிற்காமல் தள்ளிச் சென்று நிற்பதால், பயணிகள் ஓடிச்சென்று ஏறி தவறி விழ நேருகிறது. இருக்கைகள் கழன்று விழும் நிலையில் இருப்பதால், நின்று கொண்டே பயணிக்கும் நிலை உள்ளது. சில பஸ்களில் கம்பிகள் நீட்டி கொண்டு, உடைகளையும், உடலையும் பதம்பார்க்கும் அபாயம் உள்ளது. கூரையின் தகரங்கள் கையோடு வருமளவில் உள்ளதால், இந்நிலை எப்போது மாறுமோ என்று பயணிகள் பரிதவிக்கின்றனர்.

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ''மதுரைக்கு விரைவில் மின்சார வாகனங்கள் வர உள்ளன. அவை வந்ததும் பழைய பஸ்கள் பலவும் மாற்றப்பட்டு விடும்'' என்றனர்.

Advertisement