மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பால் டி.என்.பி.எஸ்.சி., நிபந்தனை ரத்து

சென்னை : 'குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், கூடுதல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளில், மாற்று எழுத்தர் கோரும் விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளி சான்றிதழுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசு தலைமை மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது அரசு சுகாதார தலைமை கண்காணிப்பாளரிடம் பெற்ற மருத்துவச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கடந்த மாதம் அறிவித்தது.

இதற்கு, மாற்றுத்திறனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து தேர்வாணையம், மருத்துவ ஆணையத்தில் பெறப்பட்ட சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டாம்; பழைய முறைப்படி மாற்றுத்திறனாளி சான்றிதழை பதிவேற்றம் செய்தால் போதுமானது என்று தெரிவித்து உள்ளது.

இது குறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை:

மாற்று எழுத்தர் கோரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி சான்றிதழை, ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதலாக வேறு எந்த சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement