ஒரே இரவில் 350 ட்ரோன்கள்... பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி; துருக்கியின் நாசவேலை

25

புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான போரின் போது, பாகிஸ்தானுக்கு 350 ட்ரோன்களையும், அதனை இயக்குவதற்கு ஆபரேட்டர்களையும் துருக்கி வழங்கியது தெரிய வந்துள்ளது.


பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


மேலும், இந்தியா நடத்திய வான்வெளி தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் சூறையாடப்பட்டன. அதேவேளையில், மே 7 மற்றும் 8ம் தேதி இரவில் இந்தியா மீது 300 முதல் 400 ட்ரோன்களைக் கொண்டு பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.


இந்தியாவுக்கு எதிரான இந்த தாக்குதலில் சீனா மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்து. தாக்குதல் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் ஷோபியா குரேஷி, துருக்கியின் சோங்கர் ரக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறியிருந்தார்.


இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போரின் போது, பாகிஸ்தானுக்கு 350 ட்ரோன்களையும், அதனை இயக்குவதற்கு ஆபரேட்டர்களையும் துருக்கி வழங்கியதாக புது தகவல் கிடைத்துள்ளது. இதன்மூலம், இந்தியா மீது ட்ரோன் தாக்குதல் நடத்த துருக்கி உதவி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான், துருக்கி நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத்துறை ரீதியான உறவுகள் அதிக வளர்ச்சியடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ உபகரணங்கள் வழங்குவது மட்டுமல்லாமல், அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சியையும் துருக்கி வழங்கி வருகிறது.


ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் துருக்கி நாட்டைச் சேர்ந்த ட்ரோன் ஆபரேட்டர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement