கோலி ஓய்வு... சச்சின் நெகிழ்ச்சி

புதுடில்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராத் கோலி.
இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் கோலி 36. களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் இவர், 2016-19 காலக்கட்டத்தில் ரன் மழை பொழிந்தார். சமீபத்திய போட்டிகளில் 'ஆப்-ஸ்டம்ப்பிற்கு' வெளியே வீசும் பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். இவரது பலவீனம் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அம்பலமானது. இதையடுத்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்தார். வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவரது சேவை, அணிக்கு தேவை என இந்திய கிரிக்கெட் போர்டு கருதியது. இதனால், ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டது.
இந்த சமயத்தில் டெஸ்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். இவரது வழியில், தான் நேசித்த டெஸ்ட் போட்டியில் இருந்து கோலியும் நேற்று விடைபெற்றார். இது, இந்திய அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும்.
கோலி ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் கூறியது:
சச்சின்: 12 ஆண்டுக்கு முன் நான் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற தருணத்தில், தனது தந்தை பரிசாக அளித்த கயிறை எனது கையில் கட்டி பரிசளித்தார் கோலி. இச்செயல் எனது மனதை தொட்டுவிட்டது. தற்போது கோலிக்கு வழங்க என்னிடம் கயிறு இல்லை. உங்களது சிறப்பான ஆட்டத்தினால் எண்ணற்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் உருவாகியுள்ளனர்.
காம்பிர்: பசியுடன் இருக்கும் சிங்கம் போல, கிரிக்கெட் மீது ஆர்வத்துடன் இருப்பார் கோலி. இந்திய டெஸ்ட் அணியில் அவர் இல்லாதது வருத்தம்.
புஜாரா: டெஸ்ட் போட்டிகளில் நீங்கள் வைத்திருந்த ஆர்வம் தான் என்னை துாண்டியது. பல ஆண்டுகளாக உங்களுடன் இணைந்து விளையாடியது பெருமையாக உள்ளது. மறக்க முடியாத 'பார்ட்னர்ஷிப்' அமைத்து வெற்றி பெற்றுத் தந்த நாட்கள் என்றும் நினைவில் நிற்கும்
பும்ரா: உங்கள் தலைமையில் டெஸ்டில் அறிமுகம் ஆனது, தேசத்திற்காக இணைந்து புதிய உச்சம் தொட்டது மறக்க முடியாதது. நீங்கள் விட்டுச் சென்ற பாரம்பரியம் என்றும் மாறாது.
டிவிலியர்ஸ்: வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளீர்கள், உங்களது அர்ப்பணிப்பு, திறமை எப்போதும் என்னை கவர்ந்துள்ளது. உண்மையான ஜாம்பவான் நீங்கள் தான்.
கிரீடம் உள்ளது
கோலி பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட செய்தியில்,' இந்திய டெஸ்ட் ஜாம்பவான்களில் ஒருவர் விடைபெற்றிருக்கிறார். அவரது கிரீடம் அப்படியே உள்ளது. இவரது சாதனைகள் ஒப்பிட முடியாதது,' என தெரிவித்துள்ளது.
'மேடம்'... நான் தான் அடுத்த சச்சின்
டில்லியில் பள்ளியில் படிக்கும் போது, கிரிக்கெட் வீரராக வருவேன் என அடிக்கடி ஆசிரியர்களிடம் சொல்லியுள்ளார் கோலி. விஷால் பாரதி பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,'' மேடம், நான் தான் இந்தியாவின் அடுத்த சச்சின், என கோலி தெரிவித்தார்,' என்றார்.
'சிக்கூ' தெரியுமா
கடந்த 2007ல் கோலியின் கன்னங்கள், மூக்கு சற்று துாக்கலாக தெரிந்தன. இதைப் பார்த்த அவரது ரஞ்சி கோப்பை அணி பயிற்சியாளர் 'சிக்கூ' என ('சப்போட்டோ') பட்டப்பெயர் வைத்தார். இப்பெயரை சொல்லி தான் தோனி அடிக்கடி அழைப்பார்.
'பிட்னஸ்' முக்கியம்
கோலி உடற்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பார். 90 சதவீதம் வேக வைத்த அல்லது அவித்த உணவுகளை எடுத்துக் கொள்கிறார். கிரேவி, மசாலா கலந்த பொருட்களை தவிர்த்து விடுகிறார். இதனால் தான் 36 வயதிலும், கிரிக்கெட்டில் நீடிக்கிறார்.
18 ஆண்டு பயணம்
கோலி தனது 18 வயதில் (2006) தந்தையை இழந்தார். இறுதிச்சடங்கிற்கு செல்லாமல், டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் 90 ரன் எடுத்து டில்லி அணியை 'பாலோ ஆன்' ஆபத்தில் இருந்து காப்பாற்றினார். பின் தந்தை இறுதிச் சடங்கிற்கு சென்றார்.
பின் டெஸ்ட் அரங்கில் 30 சதம் அடித்தார். தனது 36 வயதில் மீண்டும் டில்லி மைதானத்தில் (2025, பிப். 1) விளையாடினார். ரயில்வேஸ் அணிக்கு எதிராக ரஞ்சி கோப்பை போட்டியில் பங்கேற்றார். இவரைக் காண 20,000 ரசிகர்கள் திரண்டனர். 15 பந்தில், 6 ரன் மட்டும் எடுத்த கோலி, ரயில்வே அணியின் ஹிமான்ஷு சங்வான் 'வேகத்தில்' போல்டானார். அப்போது ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்.
வியப்பாக உள்ளது
டில்லி அணி பயிற்சியாளர் சரண் தீப் சிங் கூறுகையில்,'' இங்கிலாந்து தொடரில் 2 பயிற்சி போட்டியில் விளையாட வேண்டும். 2018 தொடரைப் போல 4 முதல் 5 சதம் அடிக்க வேண்டும் என்றார். தற்போது திடீரென ஓய்வு அறிவித்தது வியப்பாக உள்ளது,'' என்றார்.