சித்ரா பவுர்ணமி வழிபாடு; திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை கடந்த, 10ம் தேதி சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சக்தி கும்பம் அழைத்து, கோவில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. சக்தி கும்ப ஸ்தாபனம் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் மாவிளக்கு, பொங்கல் வைத்தல் வழிபாடு நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
நேற்று காலை, 6:00 மணிக்கு முத்தங்கி அலங்கார பூஜை, காலை, 9:00 மணிக்கு காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாண உற்சவத்தை கண்டு சுவாமியை வழிபட்டனர்.
தொடர்ந்து, அம்மன் திருவீதி உலா, அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இன்று காலை, 8:45 மணிக்கு மஹா அபிேஷகம், மதியம், 12:00 மணிக்கு வெள்ளி, தங்க கவச சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது.
* கோட்டூர் ரோடு விண்ணளந்த காமாட்சி அம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், கடந்த, 6ம் தேதி கணபதி ேஹாமம், கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.நேற்றுமுன்தினம் தீர்த்தம் கொண்டு வருதல், அம்மனுக்கு அபிேஷக பூஜைகள் நடந்தது.
நேற்று, மஹா கணபதி ேஹாமம், நவக்கிரக சாந்தி நடந்தது. அதன்பின், காமாட்சி அம்மனுக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.தொடர்ந்து, மஹா அபிேஷகம், அலங்கார பூஜைகள், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் திருவிளக்கு வழிபாடு, கோவிலில் வீதி உலா வருதல், ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
* உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, நேற்று காலை ஸ்ரீ விசாலாட்சி அம்பாளுக்கு மகா அபிேஷகமும், சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. பின்னர், ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* உரல்பட்டி கமலகாமாட்சியம்மன் கோவிலில், கமலகாமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கணபதி ேஹாமம் நடந்தது. தீர்த்த அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சக்தி கும்பம் அழைத்து வந்த பிறகு, முளைப்பாலிகையும், மாவிளக்கும் எடுத்து வந்தனர்.
நேற்று காலை, 9:30 மணிக்கு, திருக்கல்யாணத்துக்கு சீர் கொண்டு வரப்பட்டு, மதியம், கமலகாமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இன்று, (13ம் தேதி) அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு, மகா அபிேஷகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு வாண வேடிக்கை நடக்கிறது.
* உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், திருக்கல்யாண திருவிழா கடந்த 6ம் தேதி பூச்சொரிதல், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை 6:30 மணிக்கு, திருவிளக்கு ஏற்றப்பட்டது; காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண திருநிகழ்வுகள் துவங்கியது.
காலை, 10:30 மணிக்கு திருமாங்கல்ய தாரணமும், மகா தீபாராதனையும் நடந்தது. உடுமலை காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா அனுஷ பக்த சபா சார்பில், திருக்கல்யாண விருந்து, ராமய்யர் கல்யாண மண்டபத்தில் நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண கோலத்தில் அம்மன் திருவீதியுலா நடந்தது.
* சின்னபொம்மன்சாளை கமலகாமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு பால், பன்னீர் என பல்வேறு திரவியங்களில் அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுப்பகுதி பல்வேறு கிராமங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இதே போல், தீபாலபட்டி காமாட்சி அம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.