கட்டுமான பொருட்கள் விலை 'கிடுகிடு' ஒப்பந்ததாரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, இந்திய பில்டர்ஸ் சங்கத்தின் புதுச்சேரி கிளை சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது.

பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம்எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.செயலாளர் அசோகன், உடனடி முன்னாள் தலைவர் பிரேமானந்த், முன்னாள் தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதை கண்டித்தும், இதனால் ஒப்பந்ததாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்துக்கு தகுந்தவாறு, ஒப்பந்ததாரர்களுக்கு பி.எஸ்.ஆர்., ரேட் எனப்படும் விலை நிர்ணய பட்டியலை அரசு உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப் பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய பில்டர்ஸ் சங்கத்தின் புதுச்சேரி கிளை, புதுச்சேரி சிவில் இன்ஜினியர் சங்கம், புதுச்சேரி ஒப்பந்ததாரர் நலச் சங்கம், புதுச்சேரி பில்டிங் டெவலப்பர்ஸ் சங்கம், கிரெடாய் அமைப்பு, புதுச்சேரி பில்டர்ஸ் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement