பக்தர்களின் கண்ணீரை துடைக்கும் பலமுறி கணபதி

ஹூப்பள்ளி நகரின் கோகுலம் சாலையின் காந்தி நகரில் வரலாற்று பிரசித்தி பெற்ற பலமுறி கணபதி கோவில் உள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, வேண்டிய வரம் தரும் தலமாகும். இதனால் இங்கு பக்தர்கள் குவிகின்றனர்.

ஹூப்பள்ளி நகரின் கோகுலம் சாலையின் காந்தி நகரில், தற்போது கோவில் உள்ள இடம், காலியாக இருந்தது. தொண்டு அமைப்புக்கு சொந்தமான இந்த இடம், பொது நோக்கத்துக்கு பயன்படுத்தப்பட்டது. 1996ல் இங்கு பலமுறி விநாயகர் கோவில் கட்டப்பட்டது. விக்ரகம் பிரதிஷ்டை கோலாகலமாக நடந்தது. அதன்பின் இப்பகுதி திருத்தலமாக மாறியது.

கஷ்டங்கள் நிவர்த்தி



தார்வாட் உட்பட சுற்றுப்பகுதிகளில் இருந்து பக்தர்கள் வர ஆரம்பித்தனர். பலமுறி கணபதியை தரிசித்தால், வீட்டில் உள்ள கஷ்டங்கள் நிவர்த்தியாகும்; மகிழ்ச்சி பொங்கும். இங்கு குடிகொண்டுள்ள பலமுறி கணபதியை தரிசித்தால் தைரியம், புத்தி கூர்மை, வாழ்க்கையில் வெற்றி, பாதுகாப்பு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளை தகர்த்து, வெற்றி அடையும் சக்தி கிடைக்கும். எதிரிகளை விரட்டி அடித்து, நல்வாழ்வு அளிப்பார்.

கோவிலின் சக்தியை பற்றி கேள்விப்பட்டு, பக்தர்கள் தேடி வருகின்றனர். பலமுறி கணபதி கோவில் அருகிலேயே, வீர பத்ரேஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் 2003ல் கட்டப்பட்டது. இரண்டு கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

வெற்றி உறுதி



பொதுமக்கள் மட்டுமின்றி மக்கள் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், வி.ஐ.பி.,க்கள் பெருமளவில் வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பலமுறி கணபதியை தரிசித்த பின், வேட்புமனு தாக்கல் செய்வது, பிரசாரத்தை துவக்குவதும் வழக்கம். அப்படி செய்தால் வெற்றி உறுதி என்பது, இவர்களின் நம்பிக்கை.

புதிதாக வாகனம் வாங்குவோர், தொழில் துவங்குவோர், வெளிநாடு பயணம் மேற்கொள்வோர், நல்ல வேலை கிடைக்காமல் அவதிப்படுவோர், திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாத தம்பதியர், குடும்பத்தில் கஷ்டத்தை அனுபவிப்போர் என, பலரும் பலமுறி கணபதியை தரிசனம் செய்து பயனடைந்துள்ளனர்.

பக்தர்களின் கண்ணீரை துடைப்பதில், இவர் கை தேர்ந்தவர். எனவே வெளி மாநிலங்களில் இருந்தும், இவரது அருளை பெற பக்தர்கள் வருகின்றனர்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளி 413 கி.மீ., மங்களூரு 357.5 கி.மீ., தொலைவில் உள்ளது. கர்நாடகாவின் அனைத்து நகரங்களில் இருந்தும், ஹூப்பள்ளிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர், ஹூப்பள்ளி விமான நிலையத்தில் இறங்கி, சாலை வழியாக கோவிலுக்கு செல்லலாம். ஹூப்பள்ளியில் தங்குவதற்கு தரமான ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள் உள்ளன.தரிசன நேரம்: காலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.தொடர்பு எண்: 93790 49624.





- நமது நிருபர் -

Advertisement