தாயின் கருவறைக்குள் செல்லாத ஒருவர் யார்? பெரிய புராண சொற்பொழிவில் விளக்கம்

பல்லடம், ; பல்லடம் அடுத்த, ராயர்பாளையம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில், பெரிய புராண தொடர் வகுப்பு நடந்தது.
பவானி சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் தியாகராஜன் பேசியதாவது:
திருஞானசம்பந்தரில் துவங்கி, சேக்கிழார் வரை, 27 ஆசிரியப் பெருமக்கள் நமக்கு அருளிச் சென்ற பெரும் கொடை தான் பன்னிரு திருமுறை. வெவ்வேறு காலகட்டங்களில் அருளப்பட்டுள்ளன.
இவை எவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளன என்பது இறைவன் சிவபெருமானுக்கு மட்டும் தான் தெரியும்.
இந்த நுாலை படித்தால் என்ன பயன் என்ற கேள்வி எழுமானால், கணக்கில்லாத பயன்கள் அதில் பொதிந்து கிடக்கின்றன.
இயற்றப்படுவது என்பதற்கும் அருளப்படுதல் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. புலவர்களால் உருவாக்கப்படுவதை இயற்றப்படுவது என்கிறோம். இறைவனின் அருளால் பாடப்படுவதை அருளப்படுதல் என்கிறோம்.
இறைவனை காணும் போது, உணரும்போது பாக்களாக வெளிப்பட்ட பாடல்கள் தான் பன்னிரு திருமுறை. எனவே, இவை இயற்றப்பட்ட பாடல்கள் அல்ல; இறைவனால் அருளப்பட்டவை.
இறைவன் செய்த நுாலுக்கு வேதம் என்றும், மற்றொரு நுாலுக்கு ஆகமம் என்ற பெயர். இறைவனுடைய புகழை சொல்வது வேதம். இறைவனை வழிபாடு செய்யும் செயல்களை உணர்த்தும் நுால் ஆகமம். எந்த சமயத்தை நாம் பின்பற்றினாலும், அதில் அருளப்பட்ட கோட்பாடுகளை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சைவ நெறியை தோற்று வித்தது இறைவனாகிய சிவபெருமானே ஆவார்.அவர் எப்போது தோன்றினார், எப்போது சைவ நெறியை தோற்றுவித்தார் என்ற கேள்வி எழுமானால், காலத்தை கடந்து நிற்க கூடியதாக அதன் பதில் இருக்கும். சிவபெருமான் யார் என்ற கேள்வி எழுந்தால், தாயின் கருவறைக்குச் செல்லாத ஒருவர் என்றே கூற வேண்டும்.
ஆனால், எல்லாருக்கும் தாயும் தந்தையுமாக இருப்பவர். நமக்குள் இறைவன் இருக்கிறான் என்று நாம் உணர்கிறோமோ, அன்றுதான் பிறப்பினுடைய நோக்கம் நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.