வசூலில் பட்டய கெளப்பும் 'புல்லட்' ராஜா... ரெவின்யூ ஆபீசர்களுக்கு புரோக்கர்ஸ் துாக்குறாங்க 'கூஜா'

''அப்பப்பா... என்ன கூட்டம் பாருங்க அக்கா. அடிக்கிற வெயிலை கூட பொருட்படுத்தாம இத்தனை கூட்டம் வந்திருக்கு. அவிநாசி கோவில்ன்னாலே ஸ்பெஷல் தான் போங்க...'' என பிரமித்தாள் மித்ரா.

''ஆமா மித்து. வழக்கம் போலவே சித்திரை தேர்த்திருவிழாவை ரொம்ப சிறப்பாக ஏற்பாடு பண்ணியிருக்காங்க. திரும்பின பக்கமெல்லாம் அன்னதானம் போட்டாங்க. பக்தர்களும், பொதுமக்களும் வயிறாற சாப்டாங்க. இருந்தாலும், சின்ன சின்ன சங்கடமும் இருக்கத்தான் செய்யுது. கோவில் வளாகத்தில, 63 கடைகளை, கோவில் நிர்வாகம் ஏலம் விட்டிருக்கு. ஏலம் எடுத்தவங்க, 60 கடைகளுக்கு மேல உள்வாடகைக்கு விட்டிருக்காங்க. ஆனா, கோவிலையொட்டி ரோட்டோரத்துல கடை வச்சவங்ககிட்ட எல்லாம் கட்டாய வாடகை வசூல்ல இறங்கிட்டாங்களாம். இதனை கோவில் நிர்வாகம் தான் சரி பண்ணணும்,'' என்றாள் சித்ரா.

போகிற வழியில், பூண்டி கோவிலுக்குள் ஸ்கூட்டரை விரட்டினாள் மித்ரா. ஆளுங்கட்சி சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த 'பிளக்ஸ் பேனர்' கண்ணை உறுத்த, ''மூனு வருஷத்துக்கு முன்னாடி பூண்டி நகராட்சி சார்பில, கோவில் வளாகத்துல கழிப்பிட வளாகம் கட்டி கொடுக்க, துாய்மை இந்தியா திட்டத்துல நிதி வழங்கியிருக்காங்க. ஆனா, கோவில் நிர்வாகம் அனுமதி தரல. இதனால, நிதி திரும்பி போயிடுச்சு. இப்ப திடீர்னு, நகராட்சிக்கு அனுமதி கொடுத்தாங்க. ஆனா, 40 லட்சம் ரூபாய் நிதி திரும்ப வந்துருக்கு. இதுக்கு நன்றி சொல்லி தான், பேனர் வச்சிருக்காங்க,''

''தடைபட்ட வேலைக்கு, இரண்டாவது தடவை நிதி ஒதுக்கினதே பெரிய விஷயம். இதுக்கு மத்திய அரசுக்கு தான் நன்றி சொல்லணும். ஆனா, மாநில அரசு நிதி ஒதுக்கின மாதிரி, 'லோக்கல் பாலிடிக்ஸ்' பண்றாங்களேன்னு, மக்கள் கமென்ட் அடிக்கிறாங்களாம்,'' என்றாள் மித்ரா.

அங்கிருந்த மர நிழலில் இருவரும் அமர்ந்தனர்.

''நானும் ஒரு ஆளுங்கட்சி மேட்டர் சொல்றேன்,'' என்ற சித்ரா, ''காங்கயம் வடக்கு ஒன்றிய ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தரு, மாஜி ஒன்றிய கவுன்சிலரோட, அ.தி.மு.க., கொடி கட்டிய கார்ல தான் பவனி வர்றாராம். கட்சிக்காரங்க கேட்டதற்கு, அவரு நெருங்கிய சொந்தம்ன்னு சொல்றாராம். இது லோக்கல் மினிஸ்டர் காதுக்கு போக, என்னதான் சொந்தக்காரரா இருந்தாலும், மேலிட உத்தரவு வந்ததுன்னா 'கருணை' காட்ட முடியாதுன்னு எச்சரிக்கை பண்ணிட்டாராம்,'' என்றாள்.

வசூல் 'ராஜா'



அப்போது சித்ராவின் 'வாட்ஸ் ஆப்'க்கு ஒரு ஆடியோ மெசேஜ் வர, கேட்டு 'உச்' கொட்டினாள் சித்ரா.

''ச்சே...என்ன மனுஷங்க; இப்படியுமா இருப்பாங்க...'' என கோபத்தில் முணுமுணுத்த படியே பேசினாள். ''கணவரை பறி கொடுத்த ஒரு லேடி, 'டெத் சர்டிபிகேட்' கேட்டு அவிநாசி ஜி.எச்.,ல அப்ளை பண்ணி இருக்காங்க. டாக்டரும், சர்டிபிகேட் கொடுத்துட்டாராம். ஆனா, அஞ்சாயிரம் கொடுத்தா தான், சர்டிபிகேட் கொடுக்க முடியும்ன்னு, அத கொடுக்க வேண்டிய பொறுப்பு நர்ஸ் ஒருத்தரு சொல்லிட்டாராம். விசாரிச்சு பார்த்ததுல, அந்த நர்ஸோட வீட்டுக்காரர் தான் பணம் கேட்கிறாராம். ஆளுங்கட்சியில இருக்கற அவரு, இந்த மாதிரி அடிக்கடி வசூல் பண்ற வேல செஞ்சு நல்லா கல்லா கட்றாராம்...'' என்றாள் சித்ரா.

அதேசமயம் சாலையில் புல்லட்டில் ஒருவர் 'பறக்க', ''லோக்கல் புல்லட் 'ராஜா' போல...'' என சிரித்தாள் சித்ரா.

''அனுப்பர்பாளையத்துல இருக்கற ஒரு ரேஷன் கடையில, பல ஆயிரம் ரூபா முறைகேடு செஞ்ச ஒரு ஊழியரு மேல, தொடர்ந்து கம்ப்ளையன்ட் வந்ததால, ஒரு வழியா போலீஸ் எப்.ஐ.ஆர்., போட்டனர். அந்த ஊழியர், தொழிற்சங்க நிர்வாகியா இருக்கிறதால, அவரு மேல 'ஆக்ஷன்' எடுக்க வேண்டாம்ன்னு, 'பிரஷர்' கொடுத்தாங்களாம். இருந்தாலும், அவரு 'ரிட்டையர்டு' ஆகற சமயத்துல, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்களாம் ரெவின்யூ ஆபீசர்ங்க'' என்றாள் மித்ரா.

இப்படியுமா...



''பிச்சம்பாளையம், ஜெ.ஜெ.., நகர்ல இருக்கற புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிச்சு, தோழர் கட்சியை சேர்ந்தவங்க ஆபீஸ் போட்டிருக்காங்க. அந்த இடத்துக்கு எதிரில இலைக்கட்சிக்காரங்களும் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிச்சு, ஆபிஸ் திறந்திருக்காங்க. இதையும், ரெவின்யூ ஆபிசர்ங்க கவனிச்சாங்கன்னா பரவாயில்ல,'' என்றாள் சித்ரா.

''அதே மாதிரி, திருப்பூர் வடக்கு தாலுகா ஆபீசில இ-சேவை மையத்துக்கு தினமும் நிறைய பேரு கால்கடுக்க வரிசையில நின்று தங்களுக்கு தேவைப்பட்ட சர்டிபிகேட்டுக்கு விண்ணப்பிக்கிறாங்க. இதுல, என்ன ஒரு கூத்துன்னா, புரோக்கர்ஸ் பின்பக்க கதவு வழியா உள்ளே நுழைஞ்சு, அவங்ககிட்ட காசு கொடுத்தவங்களோட விண்ணப்பத்தை கொடுத்து, வேலையை முடிச்சுட்டு போயிடறாங்கன்னு சொல்றாங்க. கலெக்டர் இந்த மேட்டரை சீரியஸா எடுத்த பரவாயில்ல...'' என தொடர்ந்தாள் சித்ரா.

''கார்ப்பரேஷன் பம்ப் ஆபரேட்டர் ஒருத்தருக்கு, 'மொபைல் போன் ஆப்'பில், 2, 3 தனியார் பைனான்ஸ் கம்பெனியில் இருந்து, ஒரு லேடி லோன் வாங்கி கொடுத்திட்டு, ஒட்டு மொத்த அமவுன்ட்டையும் அவங்க அக்கவுன்ட்டுக்கு மாத்திட்டாங்களாம். ஏமாந்து போன அந்த பம்ப் ஆபரேட்டர், கமிஷனர் ஆபீஸ்ல புகார் கொடுத்திருக்காரு. 'பேங்க் ஸ்டேட் மென்ட்' முதற்கொண்டு எல்லா எவிடென்ஸையும் கொடுத்திருக்காரு. இருந்தும், அந்த லேடி மேல எந்த ஆக்ஷனும் எடுக்கலையாம்,'' என்றாள் மித்ரா.

''பெரிய ஆபீசர் 'லெவல்' வரைக்கும் அப்படி என்ன தான் அந்தம்மாவுக்கு செல்வாக்குன்னு தெரியலையே...'' என 'உச்' கொட்டினாள் சித்ரா.

''பெரிய ஆபீசர்ன்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகம் வருது. கோவை போலீஸ் சரகத்துல இருக்கற பெரிய ஆபீசர், தனக்கு கீழ வேல பார்க்குற ஆபீசர்களுக்கு லீவு தர்றதே இல்லையாம். இதனால நல்லது கெட்டதுக்கு போக முடியாம நாலு மாவட்டத்தைச் சேர்ந்த ஆபீசர்ஸ் தவிக்கிறாங்களாம்,'' என்ற சித்ரா, ''அப்படியே இன்னொரு விஷயத்தையும் சொல்லிடறேன்'' என்றவள் தொடர்ந்தாள்.

''அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்ல சி.எம்., செல்லுக்கு போற பெட்டிஷன்களை விசாரிக்கிற ஒரு போலீஸ்காரரு, 'கம்ப்ளைன்ட்' தர்றவங்களை கூப்பிட்டு 'பஞ்சாயத்து' பேசி, பெட்டிஷனை முடிச்சு வச்சிடறாராம். 'பிரச்னையே முடியாம பெட்டிஷனை ஏன் குளோஸ் பண்றீங்க'ன்னு கேட்டா, 'சி.எம்., செல்லுக்கு போற 'பெட்டிஷன்'களை, 30 நாளுக்குள்ள குளோஸ் பண்ணனும்; 30 நாள் கழிச்சு, திரும்பவும் 'பெட்டிஷன்' போடுங்க'ன்னு, ஐடியா வேற கொடுக்கிறாராம்,'' என்றாள் மித்ரா.

''திருப்பூர் அ.தி.மு.க.,வுல கோஷ்டி பூசல் அதிகமாகிடுச்சாம்'' என அரசியல் மேட்டருக்கு தாவினாள் சித்ரா. ''பல்லடம் தொகுதி வி.ஐ.பி., வர்ற எலக்ஷன்ல சிட்டிக்குள்ள போட்டிபோட காய் நகர்த்திட்டு இருக்காராம். இதுக்காக, தன்னோட ஆதாரவாளர்களை திரட்ட ஆரம்பிச்சுட்டாராம். அவங்களும், இப்போதைய கட்சி பொறுப்பை கவனிச்சுக்கிட்டு இருக்கற பொள்ளாச்சிகாரரோட போட்டோ இல்லாம, கட்சியோட பொது செயலாளர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி, 'பிளக்ஸ் பேனர்' வைச்சு, கோஷ்டி பலம் காட்ட ஆரம்பிச்சுட்டாங்களாம்,'' என்றாள்.

நண்பேன்டா...



''தாராபுரத்துல, பைனான்ஸியர் ஒருத்தர்கிட்ட, ஒருத்தரு தன்னோட காரை அடமானம் வைச்சு, நாலு லட்சம் ரூபாய கடன் வாங்கியிருக்காரு. ரொம்ப நாளா அவரு அந்த பணத்தை திருப்பி தராததால, அந்த பைனான் சியர் கார் பிரியரான தன்னோட போலீஸ் பிரெண்ட்கிட்ட, காரை வித்துட்டாராம். கொஞ்ச நாள் கழிச்சு வந்து, வாங்கின பணத்தை கொடுத்து காரை வாங்கிட்டு போயிட்டாராம்,''

''கொடுத்த பணத்தை போலீஸ்காரர் திரும்ப கேட்க, 'நீங்க கொடுத்த காசுல பிரியாணி கடை போட்டுட்டேன்; கொஞ்சம் பொறுங்க தர்றேன்னு சொல்லிட்டாராம் அந்த பைனான்சியர். வடை போச்சேங்கற கதையாக, காரும் போச்சு, பணமும் போச்சுன்னு புலம்பறாராம் அந்த போலீஸ்காரர்'' என்றாள் மித்ரா.

''மித்து, பல்லடம் கரைப்புதுார் பஞ்சாயத்துல, போன வருஷம் நல்ல தண்ணி கனெக் ஷனுக்கு பணம் கட்டுன பலபேர் காத்துட்டு இருக்காங்க. விசாரிச்சப்ப, வசூலிச்ச ஆயிரக்கணக்கான பணம் கணக்குலயே வரலையாம். முன்னாடி பஞ்சாயத்து பதவியில இருந்தவங்க மொத்தமா சுருட்டிட்டு போயிட்டாங்கன்னு பேசிக்கிறாங்க. பணம் கொடுத்து ஏமாந்த மக்கள் என்ன செய்றதுன்னு தெரியாம நடையாய் நடந்துட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.

''ஆமாக்கா, நீங்க பஞ்சாயத்துன்னு சொன்னதும் தான், இன்னொரு விஷயமும் ஞாபகத்துக்கு வருது. வடுகபாளையம்புதுார் பஞ்சாயத்துல, ரேஷன் கடை திறந்தாங்க. ராத்திரியோட ராத்திரியா தி.மு.க., கட்சி கொடி கம்பங்கள் நட்டி, பிளக்ஸ் பேனரெல்லாம் வச்சி, மறுநாள் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., திறப்பு விழா செஞ்சுட்டு போயிட்டாரு. கஷ்டப்பட்டு ரேஷன் கடை கொண்டு வந்தது நாங்க. ஆளுங்கட்சிக்காரங்க, சத்தமே இல்லாம விளம்பரம் தேடிக்கிறாங்களேன்னு, மக்கள் செம கடுப்பாயிட்டாங்க்கா'' என்றாள் மித்து.

''சரி வா மித்து கிளம்பலாம்; மழை வர்ற மாதிரி இருக்கு,'' என சித்ரா சொன்னவுடன், மித்ரா ஸ்கூட்டரில் அமர்ந்தாள்.

Advertisement