ஆசிரியர்கள் மீது அதிக பணிச்சுமை: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு

கோவை, ; தமிழகத்தில் நடத்தப்படும் 'ஸ்லாஸ்' தேர்வில், கோவை உள்ளிட்ட சில முக்கிய மாவட்டங்கள், மாணவர்கள் கற்றல் அடைவில் பின்னடைவை சந்தித்துள்ளன. பள்ளிக் கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு வழங்கும் அதிக நிர்வாக பணிச்சுமையே இதற்கு காரணம் என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.

மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 3,5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய, 'ஸ்லாஸ்' எனும் தேர்வு நடத்தப்படுகிறது.

சமீபத்தில் நடந்த தேர்வு முடிவுகளில், சென்னை, ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு அடுத்த இடத்தைதான், கோவை மாவட்டம் பிடித்துள்ளது. இந்நிலையை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடுமையாக விமர்சித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் வீராச்சாமி கூறியதாவது:

ஆசிரியர்கள், ஆசிரியர் பணிகளை தவிர, ஆண்டு முழுவதும் வாக்குச்சாவடி அலுவலராகவும், எமிஸ் பதிவேற்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நிர்வாகப் பணிச்சுமை அதிகரிப்பதால், மாணவர்களுக்கு கற்பித்தலில், அவர்களால் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

தற்போது எமிஸ் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும், பெரும்பாலான பணிகளை ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களே மேற்கொள்கிறார்கள்.

ஸ்லாஸ் தேர்வின் போது மட்டுமே, மாணவர்களுக்கு ஓ.எம்.ஆர் விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன; அவை குறித்த பயிற்சி முறையாக வழங்கப்படுவதில்லை.

தேர்வுகள் பி.எட்., பயிலும் மாணவர்களால் நடத்தப்படுகிறது. அதுபோல் தேர்ச்சி விகிதத்தின் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது என்பது குழப்பமாக உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

ஏன் முன்னுக்கு பின் முரண்?

சமீபத்தில் மத்திய அரசு, சில தனியார் அமைப்புகள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி,, தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் நிலை சற்று பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது தமிழக அரசு முன்னெடுத்து நடத்திய அடைவுத் தேர்வில், 3 மற்றும் 5ம் வகுப்புகளில் தமிழ், சூழ்நிலை மற்றும் கணிதம் ஆகிய பாடங்களிலும், 8ம் வகுப்பில் தமிழ், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களிலும், தேசிய சராசரியை விட உயர்ந்த நிலையில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement