இந்திய ராணுவத்திற்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவர்
கரூர், கரூரைச் சேர்ந்த, 8 வயது அரசு பள்ளி மாணவன் தனது, 10 மாத உண்டியல் சேமிப்பு பணத்தை இந்திய ராணுவத்துக்கு வழங்கினார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில், வெள்ளியணை கணபதி நகரை சேர்ந்த சதீஷ்குமார்,- பவித்ரா தம்பதியின் மகன் தன்விஷ், 8. வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர், உறவினர்கள் கொடுக்கும் பணத்தை, இவர் உண்டியலில் சேமித்து வருகிறார்.
இந்தியா -- பாகிஸ்தான் மோதல் ஏற்பட்ட நிலையில், நமது ராணுவ வீரர்கள் எல்லையில் கடுமையாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு உதவ கடந்த, 10 மாதங்களாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை, ராணுவத்துக்கு வழங்க முடிவு செய்தார். இதையடுத்து பெற்றோர்களுடன் வந்த தன்விஷ், தனது சேமிப்பு உண்டியலை, கலெக்டர் தங்கவேலிடம் நேற்று வழங்கினார். இதுபோல வயநாடு வெள்ள நிவாரணத்திற்கும், இவர் தனது உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.