கைகொடுத்த ட்ரோன்கள்: தேவையை அதிகரித்த போர் சூழல்

1

புதுடில்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போருக்கு பின், ராணுவத்தில் ட்ரோன்களின் தேவைக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளதால், ட்ரோன் தயாரிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆர்வமாக களத்தில் இறங்கி வருகின்றன.


நாட்டில் ட்ரோன் தயாரிப்பு மற்றும் பயன்பாடு ஏற்கனவே விறுவிறுப்புடன் நடைபெறுகிறது. ராணுவத்துக்கு மட்டுமின்றி விவசாயம், ஆராய்ச்சி, மருத்துவம், கண்காணிப்பு, டெலிவரி உள்ளிட்ட பல துறைகளிலும் பயன்படும் ட்ரோன், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்களால் தயாரிக்கப்படுகிறது.
Latest Tamil News

அன்னிய தயாரிப்புகள்



எனினும், பாகிஸ்தானில் இருந்து அதிகளவில் ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் எல்லைக்குள் ட்ரோன்கள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதால், நம் நாட்டிலும் ராணுவத்துக்கு ட்ரோன் தயாரிப்பை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


குறிப்பாக, ட்ரோன்களுக்கு வெளிநாட்டை நம்பியிராமல், உள்நாட்டிலேயே தொழில்நுட்பங்களை உருவாக்குவது அவசியம் என அத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ராணுவ பயன்பாட்டுக்கு வெளிநாட்டு ட்ரோன்களை பயன்படுத்துவதில், போரின்போது ஆபத்துகள் அதிகம் என்கின்றனர்.


ஹமாசுக்கு எதிரான போரில், இஸ்ரேல் முற்றிலும் உள்நாட்டிலேயே ட்ரோன்களை தயாரித்து பயன்படுத்துவதுடன், வெளிநாடுகளுக்கு ட்ரோன்களை ஏற்றுமதி செய்யவும் துவங்கி விட்டது. இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள், துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என தகவல் வெளியானது.


பாகிஸ்தானுடன் ஆப்பரேஷன் சிந்துார் தாக்குதலின்போது, 'இண்டியாபோர்ஜ்' நிறுவனம் தயாரித்த ஐ.எஸ்.ஆர்., ட்ரோன்களை நம் ராணுவம் பயன்படுத்தியது. புலனாய்வு, கண்காணிப்பு, உளவு பார்த்தல் ஆகியவற்றுக்காக தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் இவை. தற்போதைய போர்க்களச் சூழலில் இருந்து, ட்ரோன்களில் செய்ய வேண்டிய தர உயர்த்தல்களை தயாரிப்பாளர்கள் உணர்ந்துள்ளனர்.

ஏவுகணைக்கு மாற்று



தற்போதைய புவி அரசியல் சூழலில், ட்ரோன்களின் திறனை ஏவுகணைக்கு பதிலாக பயன்படுத்த இயலும் என்பதுடன், ஏவுகணைகளை விட ட்ரோன் தயாரிப்பு செலவு மிகக் குறைவு என்பதால், ராணுவப் பயன்பாட்டுக்கு ட்ரோன் தயாரிப்பு முன்னிலைக்கு வந்திருக்கிறது.


எதிரிகள் செலுத்தும் ட்ரோனை முறியடிக்க, இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஏவுகணையை பயன்படுத்துவதை விட, 25,000 ரூபாய் செலவிலான ட்ரோனை பயன்படுத்த முடியும் என இத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், ஏராளமான ட்ரோன்களை ராணுவம் கொள்முதல் செய்ய இயலும். அதற்கேற்ப ட்ரோன் தயாரிப்பு ஸ்டார்ட்அப்கள் விரைவில் அதிகரிக்கும் என கூறுகின்றனர்.


முதல்கட்டமாக ஐந்து முக்கிய நிறுவனங்களை தேர்வு செய்து, திறன் வாய்ந்த ட்ரோன்களை தயாரிக்க நிச்சயமான ஆர்டர் அளிப்பதுடன், வங்கிக்கடன் உள்ளிட்ட நிதி வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் நிபுணர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

இலக்குகள்



* அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம் நாட்டில் 550 ட்ரோன் நிறுவனங்கள் துவங்கப்பட உள்ளன

* மொத்த 550 நிறுவனங்களில், ராணுவ துறை சார்ந்த 100 ட்ரோன் நிறுவனங்கள் இருக்கும்

* 2030ம் ஆண்டில் நாட்டின் ட்ரோன்கள் சந்தை 93,500 கோடி ரூபாயாக இருக்கும்

* 2021ல் மத்திய அரசு வெளியிட்ட ட்ரோன் கொள்கையின் கீழ், 42 ஸ்டார்ட்அப்கள் ராணுவ ட்ரோன் தயாரிப்பு

முன்னணி நிறுவனங்கள்



ட்ரோன்களில் தாக்குதல், தற்கொலை, கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் ட்ரோன்கள் என பல வகைகள் உள்ளன. கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், ஏரோ இந்தியா - 2025 வான் சாகச கண்காட்சியில் எட்டு ட்ரோன்களை அறிமுகம் செய்தது. பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஸ்கை ஸ்ட்ரைக்கர் தற்கொலை ட்ரோன்கள், பெங்களூரின் 'ஆல்பா' மற்றும் இஸ்ரேல் நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டில் உருவாக்கியவை. நாட்டின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ட்ரோன்கள், ராணுவத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ளன.

அரசு ஊக்குவிப்பு



பாகிஸ்தானுடனான ஆப்பரேஷன் சிந்துார் போரில் ட்ரோனின் திறன் வெளிப்பட்டுள்ளது. இண்டியாபோர்ஜ் மட்டுமின்றி ஸ்கை ஸ்ட்ரைக்கர் என்ற இஸ்ரேலின் ஹராப் நிறுவன கூட்டில் பெங்களூரு நிறுவனம் தயாரித்த ட்ரோன் முக்கிய பங்காற்றியது. பயங்கரவாத முகாம்களை சுற்றி வந்து துல்லியமாக இடத்தை கண்காணித்து தாக்குதல் நடத்த இவை உதவின. ட்ரோன் கொள்முதலில் சர்வதேச கூட்டு வைத்துள்ளதுடன், சுயசார்பை உறுதி செய்ய, உள்நாட்டில் ட்ரோன் தயாரிப்புக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

Advertisement