'மக்கள் பாதுகாப்புக்கு இயங்கும் 10 செயற்கைக்கோள்'

இம்பால் : நம் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 10 செயற்கைக்கோள்கள் இடைவிடாமல் இயங்குவதாக, இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் அமலில் உள்ள இந்த நேரத்தில், மணிப்பூரில் உள்ள மத்திய வேளாண் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது:

விண்வெளி துறையில் மிகப்பெரிய சக்தியாக நாம் உருவெடுத்து வருகிறோம். 2040ல், நம் முதல் விண்வெளி நிலையத்தை உருவாக்கிவிடுவோம்.

இன்றைக்கு, 34 நாடுகளின், 433 செயற்கைக்கோள்களை நாம் வெற்றிகரமாக ஏவி விண்வெளியில் நிலைநிறுத்திஉள்ளோம்.

நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, செயற்கைக்கோள் முக்கிய பங்காற்றுகிறது. 7,000 கி.மீ., துார கடலோர பகுதிகளையும், நாட்டின் வடக்கு பகுதி முழுதையும் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டி உள்ளது.

செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் இல்லாமல் இது சாத்தியமில்லை. நம் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 10 செயற்கைக்கோள்கள் இடைவிடாமல் இயங்கி வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement