காமன் கோவிலில் பவுர்ணமி உற்சவம்

விழுப்புரம் : கண்டமானடி காமன் கோவிலில், சித்திரை பவுர்ணமியில் மன்மதன் சுவாமி வதம் செய்யும் உற்சவம் நடந்தது.

விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தில் உள்ள காமன் கோவிலில், இந்தாண்டு சித்திரை பவுர்ணமி உற்சவம், கடந்த மார்ச் 2ம் தேதி மன்மதன் சுவாமி உயிர்த்தெழுதல் நிகழ்வுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினசரி காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. முக்கிய நிகழ்வாக ரதி-மன்மதன் சுவாமி திருக்கல்யாணம் மற்றும் சுவாமி வீதி உலா கடந்த ஏப். 25ம் தேதி நடந்தது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு, ரதி-மன்மதன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகளும், உற்சவர் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடந்தது. சித்திரை பவுர்ணமி தினத்தில், நேற்று காலை 6.30 மணிக்கு மன்மதன் சுவாமியை, ஈஸ்வரன் அக்னியில் எரித்து வதம் செய்யும் வரலாற்று நிகழ்வு, தெருக்கூத்து நிகழ்ச்சி, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Advertisement