கருவேல மரங்களால் கருகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்; 62 ஏக்கர் கண்மாயில் 22 ஏக்கர் 'ஆக்கிரமிப்பு'

மேலுார் : புதுசுக்காம்பட்டி சிறுமேளம் கண்மாயில் சீமை கருவேல மரங்களை பொது ஏலம் நடத்தி அகற்ற மறுப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இக்கண்மாய் 62 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 22 ஏக்கர் பரப்பளவிற்கு சீமை கருவேல மரங்கள் காடு போல் வளர்ந்துள்ளதால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரை உறிஞ்சுகிறது. அதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயி பாண்டி: கண்மாய் நீரில் சீமை கருவேல மரங்களின் இலை, கிளைகள் விழுவதால் தண்ணீர் கறுப்பு நிறமாக மாறிவிடுகிறது. இத்தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்துவதால் நெற்பயிரில் வேர் அழுகல் நோய் ஏற்படுகிறது. பயிரைக் காப்பாற்ற அதிக உரச்செலவு செய்கிறோம். அதனால் கண்மாயில் தண்ணீர் இருந்தாலும் பயன்படுத்த முடியவில்லை.

மேலும் கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் போர்வெல்லிலும் தண்ணீர் இல்லை. மரங்களை அகற்றுவதற்கு கலெக்டரிடம் மனு கொடுக்கவே பொது ஏலம் நடத்த உத்தரவிட்டும் நீர்வளத்துறையினர் நடத்தாமல் ஆண்டுகணக்கில் காலம் கடத்துகின்றனர். பருவமழை மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்குள் உடனடியாக பொது ஏலம் நடத்தி மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றார்.

நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில்,' பொது ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.

Advertisement