விழுப்புரத்தில் 16ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் வரும் 16ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார் துறையில் பணி வாய்ப்பு பெறவிரும்பும் படித்த இளைஞர்களுக்கு, மாதம் 3ம் வெள்ளிக்கிழமை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டிற்கு இரு முறை பெரிய அளவிலான மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடக்கிறது. வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு அளிக்கும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணி இடங்களை நிரப்ப உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரையும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., நர்சிங், பார்மசி போன்ற கல்வித் தகுதி உடைய, வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

இம்முகாமில், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுவோரின், வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது.

பணி வாய்ப்பு பெறவிரும்பும் நபர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் பயோடேட்டாவுடன் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement