தி.மு.க., கூட்டணியை விரும்பும் ராமதாஸ்; மூத்த அமைச்சர் வாயிலாக ரகசிய துாது

13

தி.மு.க., கூட்டணியை விரும்பும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அதற்காக மூத்த அமைச்சர் ஒருவர் வாயிலாக, முதல்வருக்கு துாது அனுப்பியுள்ளார்.


கடந்த 2021 சட்ட சபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் மட்டுமே பா.ம.க., வெற்றி பெற்றது; லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் தோல்வியை தழுவியது. அதனால், அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், எந்த கூட்டணியில் பா.ம.க., இடம்பெறும் என்ற, கேள்வி எழுந்துள்ளது.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தி.மு.க., கூட்டணியை விரும்புவது, மாமல்லபுரம் மாநாட்டின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்தப் போவதாக கூறிய ராமதாஸ், 'இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிடுவதற்கு, முதல்வர் ஸ்டாலினை விட்டால் வேறு ஆளில்லை' என்றும் குறிப்பிட்டார்.


இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச, வடமாவட்டத்தை சேர்ந்த மூத்த அமைச்சர் வாயிலாக, ராமதாஸ் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, கூட்டணியை உறுதி செய்யவும் ராமதாஸ் தரப்பில் ஆர்வம் காட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதே நேரம், 'பா.ம.க., இடம்பெறும் கூட்டணியில், வி.சி., இடம்பெறாது' என, அக்கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து பேசி வருகிறார். எனவே, அவரை சமரசப்படுத்தினால் மட்டுமே, பா.ம.க.,வை தி.மு.க., கூட்டணியில் சேர்க்க முடியும் என்ற நிலை உள்ளது.


அதனால், கூட்டணிக்குள் வர வேண்டும் என்றால், வி.சி.,யை சமாதானப்படுத்தும் பொறுப்பை பா.ம.க., தான் செய்ய வேண்டும் என, தி.மு.க., தரப்பில் கூறியிருப்பதாக தெரிகிறது. அதை மனதில் வைத்தே, 'சித்திரை முழுநிலவு மாநாட்டில், பட்டியலின மக்களுக்கு மேலும் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.



-நமது நிருபர்-

Advertisement