விழுப்புரத்தில் 'மிஸ் கூவாகம்' போட்டி நெல்லை ரேணுகா பட்டம் வென்றார்

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த 'மிஸ் கூவாகம்-2025' அழகி போட்டியில், திருநெல்வேலி ரேணுகா, முதலிடம் பிடித்து பட்டம் வென்றார்.
விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி, தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு, தமிழக அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் 'மிஸ் கூவாகம்-2025' அழகிபோட்டி நேற்று நடந்தது.
விழுப்புரம் ஆஞ்சநேயா மண்டபத்தில், மூன்று சுற்றுகளாக முதல்நிலை தேர்வு நடந்தது. தென்னிந்திய திருநங்கை கூட்டமைப்பின் செயலர் கங்கா நாயக் வரவேற்றார். முதல் சுற்றில் 25 திருநங்கைகள் பங்கேற்றனர். அதில் அவர்களது நடை, உடை, பாவனை அடிப்படையில் 15 திருநங்கைகள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, விழுப்புரம் நகராட்சி திடலில் இரவு 7:00 மணிக்கு, மிஸ் கூவாகம் தேர்வுக்கான இறுதி சுற்று தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர் அருணா வரவேற்றார். தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவர் மோகனாம்பாள் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் விமலா, குயிலி, சுபிக்ஷா, நூரி, கங்கா, சோனியா, ஷர்மிளா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக சினிமா நடிகர்கள் தேவிபிரியா, வனிதா விஜயகுமார், சஞ்சனாசிங், கோவை பாபு, அருண் சுவாமிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, திருநங்கைகளின் கலை நிகழ்ச்சிகள், நடனம், தனித்திறன் நிகழ்வுகள் நடந்தது. நிறைவாக இரவு 10:30 மணிக்கு நடந்த இறுதிசுற்றில் பங்கேற்ற திருநங்கைகளிடம் கல்வி, பாலினம், சமூக விழிப்புணர்வு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு, இறுதிசுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், திருநெல்வேலியை சேர்ந்த ரேணுகா மிஸ் கூவாகம்-2025 அழகி பட்டத்தை வென்றார். 2வது இடத்தை கள்ளக்குறிச்சி அஞ்சனாவும், 3வது இடத்தை கோவை ஆஸ்திகாவும் பிடித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் கிரீடம் சூட்டி, ரொக்க பரிசு வழங்கினர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!