மானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய அழகர்

மானாமதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு மானாமதுரையில் வீர அழகர் வெள்ளை குதிரையில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். இன்று பவுர்ணமி நிலவொளியில் நிலாச்சோறு நிகழ்ச்சி நடைபெறும்.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா மே 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் வீர அழகர் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

நேற்று முன்தினம் இரவு எதிர்சேவை நடைபெற்றது. பூப்பல்லக்கில் அப்பன் பெருமாள் கோயிலுக்கு வீர அழகர் சென்றார். நேற்று அதிகாலை வீர அழகருக்கு 18 வகை திரவிய அபிேஷகங்கள் நடந்தது.

வெள்ளை குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி எழுந்தருளிய வீர அழகர் நகரின் முக்கிய வீதிகளின் வழியே வீதியுலா வந்து மண்டகப்படிகளில் காட்சி கொடுத்த பின்னர் காலை 6:35 மணிக்கு வைகை ஆற்றில் எழுந்தருளினார். கள்ளழகர் வேடம் பூண்டு வந்த ஏராளமான பக்தர்கள் வீர அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ந்தனர்.

விழாவில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், கமிஷனர் ஆறுமுகம்,பொறியாளர் பட்டுராஜன், நகராட்சி கவுன்சிலர்கள், குதிரை வாகன உபயதாரர்கள் நமச்சிவாயம், சிபி சவுமியன், சீனியப்பா அன் கோ உரிமையாளர்கள் சுப்ரமணியன், ஆனந்தகிருஷ்ணன் அன் கோ உரிமையாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், குணா(எ)குணசீலன், வேதா பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ், பீனாஸ் எண்டர்பிரைசஸ் உரிமையாளர்கள் வேல்முருகன், பாலாஜி பிரபாகர், அண்ணாமலை, பி.ஜி., சேம்பர் உரிமையாளர் துபாய் காந்தி, அருணாச்சி அம்மன் சேம்பர் உரிமையாளர்கள் நாகராஜன், ராஜேந்திரன், மல்லல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று இரவு வைகை ஆற்றுக்குள் பவுர்ணமி நிலவொளியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும்நிலாச்சோறு நிகழ்ச்சி நடைபெறும்.

Advertisement