ஆதார் திருத்தம் : ராமேஸ்வரம் தபால் நிலையத்தில் மக்கள் காத்திருப்பு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தபால் நிலையத்தில் ஊழியர்கள் அலட்சியத்தால் புதிய ஆதார் அட்டை மற்றும் திருத்தத்திற்கு மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

ராமேஸ்வரம் தலைமை தபால் நிலையத்தில் மணியார்டர், கூரியர், தபால் பட்டுவாடா, சேமிப்பு கணக்கில் பணம் செலுத்துதல், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட பல பணிகளுக்கு தினமும் ஏராளமான மக்கள் வருகின்றனர். இதில் புதிய ஆதார் அட்டை, ஆதார் அட்டை திருத்தத்திற்கு ஒரு நாளைக்கு 20 பேருக்கு மட்டுமே தபால் நிலைய ஊழியர்கள் டோக்கன் வழங்குகின்றனர்.

இவர்கள் காலை 9:00 மணிக்கு தபால் நிலையத்தில் காத்திருந்தாலும் ஊழியர்களின் அலட்சியத்தால் 9:30 மணிக்கு பிறகு தான் ஆதார் கார்டுகளை பதிவு செய்யும் பணியை துவக்குகின்றனர். பயனாளிகள் மதியம் 2:00 மணி வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

மேலும் ஒரு நாளைக்கு 20 பேருக்கு மேல் ஆதார் பதிவு இல்லை என ஊழியர்கள் கறாராக கூறுவதால், பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் தினமும் 50 முதல் 60 பேருக்கு ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இதே போல் ராமேஸ்வரம் தபால் நிலையத்திலும் ஆதார் அட்டை பதிவிடவும், பணியில் அலட்சியம் காட்டும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தபால் துறை தலைவர் உத்தரவிட வேண்டும்.

Advertisement