மருந்து வாங்க நீண்ட வரிசையில் காத்திருப்பு கூடுதலாக இரு கவுன்டர்கள் திறக்க உத்தரவு
சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், மருந்து வாங்க நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், கூடுதலாக இரண்டு கவுன்டர்கள் திறக்கப்படும் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் நேற்று, நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மருந்துகளை வாங்கினர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதங்களில் பரவியது. இதைத்தான் அரசு விரும்புகிறதா என பலரும் கேள்வி எழுப்பினர்.
துாத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அமைச்சர் சுப்பிரமணியன், உடனடியாக தீர்வு ஏற்படுத்த, மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
பின், கூடுதல் வரிசை ஏற்படுத்தி, மாத்திரைகளை விரைந்து வழங்க, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதுகுறித்து, மருத்துவமனை இயக்குனர் ஆர்.மணி வெளியிட்ட அறிக்கை:
தற்போதைய ஆட்சியில், அரசு மருத்துவமனைகளில் மக்கள் அதிகம் பயன்படுத்துவதே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம்.
கடந்த ஆட்சியில் தினமும், 1,000 பேர் சிகிச்சை பெற்றனர். தற்போது, 3,000 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர்.
இதய நோயாளிகளும், நரம்பியல் நோயாளிகளும், 15 நாட்களுக்கான மாத்திரைகளை வாங்க, காலை 10:00 மணிக்கு மேல் தான் வருகின்றனர். அதனால் கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது.
அமைச்சரின் அறிவுரைப்படி, மருந்து வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட உள்ளது.
தற்போது, ஐந்து கவுன்டர்களில், 10 மருந்தாளுனர்கள் வாயிலாக மாத்திரைகளை வழங்கப்படுகிறது. கூடுதலாக இரண்டு கவுன்டர்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையிலும், மருந்து வாங்க நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அங்கும் கூடுதல் கவுன்டர்கள் துவக்க வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
***