ஜல்ஜீவன் திட்டம் முடங்கியதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு

திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியில் ஜல்ஜீவன் திட்டம் முடங்கியுள்ளதால் கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் விற்பனையாகும் தண்ணீர் விலையும் அதிகரித்துள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

திருவாடானை, தொண்டி பகுதியில் கோடை வெயிலால் கண்மாய், குளங்கள் வறண்டுள்ளது. கிராமங்களில் குடியிருப்புகள் அதிகமாகி வருகின்றன. இதனால் குடிநீர் தேவை அதிகமாகவும், குடிநீர் விநியோகம் குறைவாகவும் உள்ளது.

மேலும் இப்பகுதியில் அமைக்கப்பட்ட பெரும்பாலான ஆழ்துளை கிணறுகள் செயல்படாமல் உள்ளது.

பல கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் சப்ளை செய்யப்படும் நீர் உப்பு நீராக மாறிவிட்டது. ஜல்ஜீவன் திட்டமும் முடங்கியுள்ளது. இது குறித்து பாண்டுகுடி கிராம மக்கள் கூறியதாவது:

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஜல்ஜீவன் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. பெரும்பாலான கிராமங்களில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பிரச்னை என்ற அடிப்படையில் பணிகள் நடைபெறாமல் உள்ளது. இத் திட்டத்திற்காக ரோட்டோரங்களில் போடபட்ட குழாய்கள் காட்சி பொருளாகியுள்ளது.

ஊராட்சி, பேரூராட்சி என எந்த ஊரிலும் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் விநியோகம் துவங்கவில்லை. தாலுகா முழுவதும் பணிகள் முடங்கியுள்ளது. கடும் குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி வாகனங்களில் விற்பனை ஆகும் குடிநீர் விலையும் அதிகரித்து வருகிறது.

இரு மாதங்களுக்கு முன்பு குடம் ரூ.10க்கு விற்பனை செய்யபட்டது. தற்போது ரூ.15க்கு விற்பனை ஆகிறது. இனிவரும் காலங்களில் மேலும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

Advertisement