செயின் பறித்த இடங்களில் 13,000 கேமரா பொருத்தம்

சென்னை:மாநிலம் முழுதும், செயின் பறிப்பு நடந்த இடங்களில், குற்றங்களை தடுக்க, 13,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் செயின் பறிப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. குறைந்தபட்சம், 17,000 சம்பவங்களாவது அரங்கேறுகின்றன.

செயின் பறிப்பு, வழிப்பறி போன்றவற்றில், பெண்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். செயின் பறிப்பு கொள்ளையர்களால், சாலையில் பெண்கள் இழுத்துச் செல்லப்படும் போது, பலத்த காயமடைகின்றனர்.

செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க, போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த மார்ச்சில், சென்னையில் ஒரு மணி நேரத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஈரானிய கொள்ளையர்கள், ஆறு பெண்களிடம், 22 சவரன் செயினை பறித்தனர். அவர்களில், குல்பர்சிங், 28, என்பவர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்திற்கு பின், மாநிலம் முழுதும் செயின் பறிப்பு நடந்த இடங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த இடங்களில், குற்றச் செயல்களை தடுக்க, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

செயின் பறிப்பு கொள்ளையர்கள், எளிதில் தப்பிச் செல்லும் இடங்களை தேர்வு செய்வர். அதுபோன்ற இடங்களை கண்டறிந்து, வாகன சோதனை தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஏற்கனவே செயின் பறிப்பு நடந்த இடங்களில், 4,000 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு 13,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, கண்காணிப்பு பணி நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement