செருப்பு திருடர்களா நாங்கள்? தெலுங்கானா முதல்வர் புலம்பல்

ஒன்றுபட்ட ஆந்திராவில் இருந்து தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டதும், முதல் 10 ஆண்டுகள் பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் ஆட்சி செய்தார்.
கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், அவரை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ரேவந்த் ரெட்டி முதல்வரானார். தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் அளித்த ஆறு வாக்குறுதிகளே அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்தன. அவை அனைத்துமே இலவசங்களை வாரி வழங்கும் திட்டங்கள்.
சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்த 10 ஆண்டுகளில், ஏராளமான இலவச திட்டங்களை அறிவித்தார். இவ்வாறு, அரசு பணத்தை வாரி இறைத்ததால், மாநில அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அரசு நிலங்களை விற்று, அந்த பணத்தில் இலவச திட்டங்களை நிறைவேற்றும் நிலைக்கு சந்திரசேகர ராவ் தள்ளப்பட்டார்.
அவரது ஆட்சி முடிவுக்கு வரும்போது, தெலுங்கானாவின் கடன் சுமை, 4,00,000 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நேரத்தில் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்தில், இலவச திட்டங்களை அள்ளிவிட்டது காங்கிரஸ். அதிகாரத்திற்கு வந்த பின்தான், அமர்ந்திருப்பது, சிம்மாசனம் அல்ல, 'முள்'ளாசனம் என்பதை முதல்வர் ரேவந்த் ரெட்டி உணர்ந்தார்.
ஏற்கனவே அதிக கடன் சுமையில் மூச்சுத்திணறிக் கொண்டிருந்தாலும், நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை மீறி புதிய கடன்களை பெற்று தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை காங்., நிறைவேற்ற துவங்கியது. அந்த ஆறு வாக்குறுதிகளையும் நிறைவேற்ற, 56,000 கோடி ரூபாய் நிதி தேவை. இது அம்மாநில ஆண்டு பட்ஜெட்டில், 18 சதவீதம். ஆறில் இன்னும் இரண்டு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. காரணம், கஜானா காலி.
மாநில அரசு பணியாளர் சங்கங்கள் தங்கள் நீண்டகால நிதி கோரிக்கைகளை நிறைவேற்றும்படி முதல்வருக்கு அழுத்தம் தர துவங்கியபோது தான், உண்மையான நிதி நிலவரத்தை பகிரங்கப்படுத்தினார் ரேவந்த் ரெட்டி.
'ஒரு ரூபாய் கூட கடன் பெற முடியவில்லை. அரசு அதிகாரிகளை கண்டாலே வங்கி அதிகாரிகள் ஓட்டம் எடுக்கின்றனர். கூட்டமான இடங்களில் செருப்பு திருட வந்தவர்களை போல எங்களை பார்க்கின்றனர். என்னை இரண்டாக பிளந்தால் கூட பணம் தர யாரும் தயாராக இல்லை' என, முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளிப்படையாக பேசினார்.
- நமது சிறப்பு நிருபர் -