செப்டம்பரில் மதுரையில் மாநாடு; 100 வேட்பாளர்கள் அறிவிப்பு: விஜய் தீவிரம்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கம் துவங்கி, விக்கிரவாண்டியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டிய நடிகர் விஜய், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தையும் பிரமாண்டமாக நடத்திக் காட்டியுள்ளார்.
இதையடுத்து, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க., தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஏற்க முடியாததாக இருப்பதாகச் சொல்லி, அ.தி.மு.க., தரப்பு அமைதி காத்தது.
இதையடுத்து, மதுரையில் வரும் செப்டம்பர் மாதம் மாநில மாநாட்டை நடத்தி, அடுத்தாண்டு தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட, நடிகர் விஜய் திட்டமிட்டு உள்ளார்.
இதுகுறித்து, த.வெ.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க.,வை வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் என்பதில் நடிகர் விஜய் உறுதியாக இருக்கிறார்.
அதற்காக, தீவிரமாக அரசியல் பணியாற்றி வருகிறார். கட்சிக்கு 120 மாவட்டச்செயலர்களை நியமித்து உள்ள அவர், மாநிலம் முழுதும் உள்ள, 66,000 ஓட்டுச்சாவடிகளுக்கு கட்சி சார்பில் ஏஜன்டுகளை நியமிக்கும் வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்.
தேர்வு செய்யப்பட்ட கோவை மண்டல ஏஜன்டுகளுக்கு, இரண்டு நாள் பயிற்சி முகாம் நடித்தி முடிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல ஓட்டுச்சாவடி ஏஜன்டுகளுக்கான முகாம், காஞ்சிபுரத்தில் விரைவில் நடக்கவுள்ளது. அடுத்தடுத்தும், மண்டல ஓட்டுச்சாவடி ஏஜன்டுகளுக்கான முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதற்கிடையில், வரும் செப்டம்பர் மாதம் கட்சியின் மாநில மாநாட்டை, மதுரையில் நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதில், முதற்கட்டமாக 100 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை, தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்திடம், விஜய் ஒப்படைத்து உள்ளார். அவர்கள் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின், தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்து, தொகுதிக்கு மூன்று பேர் அடங்கிய பட்டியலை விஜயிடம் வழங்க உள்ளனர்.
அதில் இருந்து, வேட்பாளர்களை இறுதி செய்து, அதை மாநாட்டில் அறிவிக்கவிருக்கிறார் நடிகர் விஜய். இவ்வாறு அவர் கூறினார்.









