மேல்பொடவூரில் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது மேல்பொடவூர் கிராமம். இந்த கிராமத்தின் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன், மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டது.

மழைக்காலங்களில் இந்த கால்வாய் வழியாக வெளியேறக்கூடிய தண்ணீர், ஏரிக்கு செல்லதக்க வகையில் சாலையோரத்திலும் கால்வாய் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாயில் தற்போது அப்பகுதியினர் தங்கள் வீடுகளின் கழிவுநீரையும் விடுகின்றனர். இந்நிலையில், இக்கால்வாயின் ஒரு பகுதியில், 2023ல், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 1.33 லட்சம் ரூபாய் செலவில் கிடைமட்ட உறிஞ்சுக்குழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, அந்த கிடைமட்ட உறிஞ்சுக்குழியில் அடைப்புகள் ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி உள்ளது.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றமும், கொசு தொல்லையும் அதிகரித்து, சுகாதார சீர்கேட்டால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

எனவே, இங்குள்ள மழைநீர் வடிகால்வாய் மற்றும் கிடைமட்ட உறிஞ்சுக்குழியில் தேங்கியுள்ள கழிவுநீர் வெளியேற ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement