பா.ஜ., பேரணியில் கலந்துகொள்ள தி.மு.க., - அ தி.மு.க.,வுக்கு அழைப்பு

12

சென்னை : ''சென்னையில் இன்று நடக்கும் மூவர்ண கொடி பேரணியில், தி.மு.க., - அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சியினரும் தேசிய கொடி ஏந்தி பங்கேற்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


தமிழக பா.ஜ., சார்பில் மராட்டிய சாம்ராஜ்யத்தின் பேரரசி ராணி அகல்யாபாய் ஹோல்கரின், 300வது பிறந்தநாள் விழா, சென்னை தி.நகர் கமலாலயத்தில், நேற்று நடந்தது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி, மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பின், நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் என்பது, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் விடுக்கப்பட்ட சவால். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், நம் ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று, பயங்கரவாதிகள் முகாம், விமானப்படை தளத்தை அழித்தது. இதையொட்டி, சென்னை, எழும்பூர் சித்ரா தியேட்டர் அருகில், இன்று மூவர்ண கொடி பேரணி நடக்கிறது.


இது, பா.ஜ., சார்பில் நடத்தப்படவில்லை. ஒற்றுமை பேரணி என்ற உணர்வுடன், தி.மு.க., -- அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும். அனைவரும் தேச ஒற்றுமையை காப்போம் என்று, பேரணியில் பங்கேற்க வேண்டும்.


காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தொலைக்காட்சி விவாதத்தில் பேசும்போது, 'அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனுடன், அப்போதைய பிரதமர் இந்திரா உறுதியாக பேசியது போல், தற்போது பிரதமர் மோடி உறுதியாக பேசவில்லை' என்றார். யாரை கொண்டு வந்து யாரோடு ஒப்பிடுவது என தெரியாமல் பேசியுள்ளார். இது, வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கிடையில், இதே மாதிரியான பேரணியை மாவட்டம் மற்றும் சட்டசபை தொகுதிகள் வாரியாக நடத்தவும் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார் நயினார் நாகேந்திரன். இதற்கான ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள கட்சியின் மாநில செயலர் முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement