நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!

5


திருநெல்வேலி: திருநெல்வேலியை அடுத்துள்ள கீழ முன்னீர்பள்ளத்தில் தி.மு.க., நிர்வாகி செல்வ சங்கர் வீட்டின் மீது மர்ம நபர்கள் அதிகாலையில் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருநெல்வேலியை அடுத்துள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வ சங்கர்( 45). இவர் பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென, இவரது வீட்டு முன்பு பயங்கர சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.


இதையடுத்து தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அப்போது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த செல்வசங்கர் உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது 4 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.



தற்போது, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செல்வசங்கர் கட்சி நிகழ்வுகளுக்கு கொடிகள் கட்டும் பணியை மொத்தமாக எடுத்து செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் பாளை யூனியன் கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.


முன்பகை காரணமாக செல்வசங்கர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியிருக்கலாமா? ஏதேனும் அரசியல் தொடர்பான பிரச்னைகளில் அவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement