அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் இம்மாத இறுதிக்குள் கலந்தாய்வு; ஆசிரியர் கழகம் கோரிக்கை

சிவகங்கை : தமிழகத்தில் உள்ள அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் இம் மாத இறுதிக்குள் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இரா.இளங்கோவன் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை கண்டறிந்து அவற்றில் உடனடியாக பள்ளி மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உரிய ஆணை வழங்க வேண்டும்.

3 ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடங்களில் முதுநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தற்காலிக ஆசிரியர்களை வைத்து சமாளிக்க நினைப்பது மாணவர்கள் கல்வி தரத்தை பாதிக்கும்.

எனவே இந்த மாதத்திலேயே உரிய அறிவிப்பினை வெளியிட்டு தேர்வினை நடத்தி வர கல்வியாண்டின் அரையாண்டுக்கு முன்பாக அனைத்து முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களையும் நிரப்பி மாணவர்கள் முழு கல்வி தகுதி பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் 120 மாணவர்களுக்கு கூடுதலாக உள்ள பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பாட ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து கூடுதல் பணியிடங்களை இந்த கல்வி ஆண்டில் வழங்கி பணியிடங்களுக்கு உரிய நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் முதுநிலை ஆசிரியர்களை கற்பித்தல் பணியை தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்தாமல், நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி போன்ற திட்டங்களுக்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்து அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

இம் மாத இறுதிக்குள் மாறுதல் கலந்தாய்வு நடத்தி ஜூன் முதல் வாரத்தில் பள்ளி திறக்கும் நாள் அன்று அனைத்து பணியிடங்களிலும் ஆசிரியர்கள் உள்ளதை உறுதி படுத்த வேண்டும் என்றார்.

Advertisement