தென்றலாக துவங்கிய தென்மேற்கு பருவக்காற்று

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் தென்மேற்கு பருவக்காற்று கடந்த சில நாட்களாக தென்றலாக வீசுகிறது.

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உச்சபட்சமாக கத்தரி வெயிலின் தாக்கமும் அனைவரையும் வாட்டி வதைக்கிறது.

காலை 9:00 மணிக்கு அதிகரிக்கும் வெயில் அதிக வெப்பத்தை கொடுத்து, மதியம் 3:00 மணிக்கு பின் படிப்படியாக குறைகிறது. வெயிலால் ஏற்படும் வெப்பம் இரவில் புழுக்கத்தை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது பெய்த கோடை மழையால் ஓரிரு நாட்கள் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவினாலும் மீண்டும் வெயில் தாக்கம் தொடர்கிறது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று ஆண்டிபட்டி பகுதியில் மெல்ல வீச துவங்கி உள்ளது.

வெயிலால் பகலில் வெப்பத்துடன் வரும் காற்று இரவில் குளிர்ந்து தென்றலாக வீசுவதால் புழுக்கம் குறைகிறது. தென்மேற்கு பருவக்காற்று பலருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.

Advertisement