'புதுச்சேரி ஒரு பார்வை 2024': பொருளாதார புள்ளிவிவர கையேடு வெளியீடு

புதுச்சேரி : புதுச்சேரி அரசு, பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்குநரகம் சார்பில், புள்ளி விவர வெளியீடான 'புதுச்சேரி ஒரு பார்வை 2024' எனும் கையேட்டினை, முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.

இதனை சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன் மற்றும் அரசுச் செயலர் (பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்) சுந்தரேசன், புதுவை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பிரகாஷ்பாபு, புதுவைப் பல்கலைக் கழக இயக்குநர் (கல்வி) தரணிக்கரசு, துறை இயக்குநர் ரத்னகோஷ் கிஷோர் சவுரே ஆகியோர் கையேட்டினைப் பெற்றுக் கொண்டனர்.

'புதுச்சேரி ஒரு பார்வை 2024' எனும் இந்த கையேட்டில், புதுச்சேரி மாநிலத்தின் சமூக பொருளாதார குறியீடுகள் மற்றும் வளர்ச்சி சாதனைகள் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய நிறைவான மற்றும் கருக்கமான புள்ளி விவரங்கள் அடங்கியுள்ளன.

மக்கள் தொகை, பொருளாதாரம், வேளாண்மை, தொழில்துறை, சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூகநலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் ஒப்பீட்டளவில் தொகுக்கப்பட்ட தகவல்கள் அடங்கியுள்ளன. திட்டமிடல், முடிவெடுத்தல் மற்றும் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக கண்காணிக்க இந்த கையேடு உதவுகிறது.

இப்பதிப்பில் சமீபத்திய தகவல்களும், வளர்ச்சிப்போக்குகளைக் காட்டும் ஒப்பீட்டு புள்ளி விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

புதுச்சேரி மாநிலத்தின் சமூக பொருளாதார நிலையைப்பற்றிய வெளிப்படைத் தன்மை, தகவலறிதல் மற்றும் பொது விழிப்புணர்வு ஆகிவற்றை மேம்படுத்தும் வகையில் இக்கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement