துணிச்சலான இளம் இந்திய வீரர்கள் * ஆண்டர்சன் பாராட்டு

லண்டன்: ''இந்தியாவின் அடுத்த தலைமுறை வீரர்கள் போராடும் குணத்துடன், துணிச்சலாக செயல்படுகின்றனர். கோலி, ரோகித் இடத்தை இவர்கள் நிரப்புவர்,'' என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 'சீனியர்' வீரர்கள் ரோகித் சர்மா 37, கோலி 36, என இருவரும் டெஸ்ட் அரங்கில் இருநது அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினும், ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் ஓய்வு பெற்றார். ரகானே, புஜாரா என இருவரும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவது இல்லை. இதனால் வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதுகுறித்து டெஸ்ட் அரங்கில் 704 விக்கெட் (188 போட்டி) சாய்த்த இங்கிலாந்து அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 42, கூறியது: ரோகித், கோலி என இருவரும் சிறந்த வீரர்கள். ரோகித் ஓய்வு பெற்றுள்ளதால், இங்கிலாந்து தொடருக்கு புதிய கேப்டன் வரவுள்ளார். அதேபோல, டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் பார்த்த சிறந்த பேட்டர்களில் ஒருவர் கோலி.
இந்த இருவரது ஓய்வு காரணமாக இந்திய அணியில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணியில் போதுமான அளவுக்கு திறமையான வீரர்கள் பலர் உள்ளனர்.
பிரிமியர் தொடரை பார்த்தால் இது நன்றாகத் தெரியும். இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களைத் தான் டெஸ்ட் அணியில் சேர்க்கின்றனர். இவர்கள் துணிச்சலாக, எவ்வித பயமின்றியும், தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இதனால் இங்கிலாந்து அணிக்கு சொந்தமண் என்றாலும், இந்திய அணி கடினமாக சவால் கொடுக்கும். ஏனெனில் அவர்கள் வலிமையாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement