கிரிப்டோ கரன்சியில் முதலீடு 2 பேர் ரூ.5 லட்சம் இழப்பு

புதுச்சேரி : கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து 2 பேரிடம் 5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த நபருக்கு, சென்னையை சேர்ந்த அவரது நண்பர் கிரிப்டோ கரன்சி நிறுவனம் குறித்து தெரிவித்துள்ளார். அதில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதை நம்பிய அவர் கிரிப்டோ கரன்சி வாங்குவதற்காக முத்தியால்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொடுத்த ஒரு லட்சம் ரூபாயுடன் சேர்த்து, 3 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். ஆனால், கிரிப்டோ கரன்சியை அவரால் விற்க முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த ஒருவர், கிரிப்டோ கரன்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளார்.

கல்மண்டபத்தை சேர்ந்த நபர், பெண் ஒருவருடன் ஆபாசமாக இருப்பதுபோல், மார்பிங் வீடியோ அனுப்பி 28 ஆயிரத்து 500 ரூபாய் ஏமாற்றியுள்ளார்.

நைனார்மண்டபத்தை சேர்ந்த நபர், டெலிகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, மொபைல் போன் ஆர்டர் செய்து 4 ஆயிரத்து 550 ரூபாய், கோவிந்தசாலையை சேர்ந்த நபர் 6 ஆயிரத்து 500 என, மொத்தம் 5 பேரிடம் 5 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement