காது ஜவ்வை கிழிக்கும் அரசியல் கட்சி கூட்டங்கள்; பல்லடம் வணிகர்கள் எதிர்ப்பு

பல்லடம் ; பல்லடத்தில், காது ஜவ்வை கிழிக்கும் வகையில் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வணிகர்கள், போலீசில் புகார் மனு அளித்தனர்.

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில், பல்லடம் சங்க தலைவர் கண்ணையன், மாவட்ட செயலாளர் லாலா கணேசன், ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, துணைத் தலைவர் பிர்லா போஸ் ஆகியோர் போலீசில் அளித்த மனு குறித்து கூறியதாவது:

பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், வணிக வளாகங்கள், உழவர் சந்தை, வார சந்தை, தினசரி மார்க்கெட் உள்ளிட்டவை அடங்கிய, வட்டார பகுதி மக்களுக்கு பிரதான இடமாக உள்ளது. பல ஆயிரக்கணக்கான ரூபாய் வாடகை செலுத்தி இங்குள்ள வியாபாரிகள் சிரமத்துடன் வியாபாரம் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல், மக்கள் நடமாட்டம் மிகுந்த என்.ஜி.ஆர்., ரோட்டில், அரசியல் கட்சிகள், அமைப்புகள் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. காது ஜவ்வு கிழியும் அளவுக்கு ஸ்பீக்கர்கள் வைத்து கூட்டம் நடத்தப்படுவதால், வியாபாரம் பாதிக்கிறது.

இதனால், கடைகளையே மூடிச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. கடந்த காலங்களில், கலையரங்கத்தில், இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. பின்நாளில், கலையரங்கம் காணாமல் போனதால், ரோட்டிலேயே கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வியாபாரிகள் இதனால் கடமையாக பாதிக்கப்படுவதால், இனி, என்.ஜி.ஆர்., ரோட்டில் இது போன்ற கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது. திருமண மண்டபங்கள் அல்லது இடங்களில் இது போன்ற கூட்டங்கள் நடத்தட்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

வணிகர் சங்க நிர்வாகிகள் தனசீலன், செல்வராஜ், ரங்கராஜ், தங்கராஜ், கருப்பசாமி, செல்லச்சாமி மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

---

பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், அரசியல் கட்சியினர் நடத்தும் கூட்டங்களால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி, போலீசில் மனு கொடுக்க திரண்ட வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள்.

Advertisement