சாக்கடை கழிவுநீரை வெளியேற்ற கால்வாய் வெட்டிய பெண்கள்

திருப்பூர்; தேங்கிய கழிவுநீரை அகற்ற, மாதர் சங்கத்தினர் கால்வாய் வெட்டும் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாநகராட்சியின், 25வது வார்டுக்கு உட்பட்டது அணைப்பாளையம். அப்பகுதியில் உள்ள அருள்ஜோதி நகர், அப்பல்லோ நகரம், ரத்தினபுரி கார்டனுக்கு, ரயில்வே சுரங்கபாலம் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. பலமுறை முறையிட்டும், பயனில்லை. 'டூ வீலரில்' சென்று வருவோர் விபத்தில் சிக்குகின்றனர்.

இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வேலம்பாளையம் நிர்வாகிகள், அப்பகுதி பெண்களுடன் இணைந்து கால்வாய் வெட்டி, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற, கால்வாய் வெட்டும் போராட்டத்தில் இறங்கினர்.

தகவல் அறிந்து சென்ற போலீசாரும், மாநகராட்சி அலுவலர்களும், பெண்களை தடுத்தனர். கழிவுநீர் வெளியேற்றும் மோட்டர் பழுதாகியிருந்ததை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். கழிவுநீர் அகற்றப்படும் வரை மாதர் சங்கத்தினர் அதே இடத்தில் நின்றிருந்தனர்.

போராட்டத்தில், நகர துணை தலைவர் செல்வி, நகர செயலாளர் கவிதா, ரங்கநாதபுரம் கிளை தை லவர் லட்சுமி, பனியன் சங்க பகுதிக்குழு உறுப்பினர் சஜினா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement