கட்டிய லுங்கியுடன் தாய்லாந்து தப்பியோட்டம்! அதிகாலை 3 மணிக்கு எஸ்கேப்பான வங்கதேச மாஜி அதிபர்

6

டாக்கா: வங்கதேச மாஜி அதிபரும் அவாமி லீக் தலைவருமான முகமது அப்துல் ஹமீத் கட்டிய லுங்கியுடன் தாய்லாந்துக்கு விமானத்தில் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் காரணமாக, அந்நாட்டு பிரதமர் ஆக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்தார். தற்போது வங்கதேசத்தில் பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்துள்ளது.


அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், கட்சியின் முக்கிய பிரமுகரும், முன்னாள் அதிபருமான அப்துல் ஹமீது வெளிநாட்டுக்கு தப்பியுள்ளார்.


இவர் 2013ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை அந்நாட்டின் அதிபராக இருந்தார். அவாமி லீக் கட்சியின் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இந்நிலையில், அப்துல் ஹமீது கட்டிய லுங்கியுடன் டாக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றதைப் போலீசார் உறுதி செய்துள்ளனர்.


இதையடுத்து, அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளனர். பலர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முகமது அப்துல் ஹமீத், சகோதரருடன் மருத்துவ சிகிச்சைக்காக தான் சென்றுள்ளனர், ஆனால் அவரின் அரசியல் எதிரிகள் தப்பியோடி விட்டதாக சித்தரிக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.


இது தொடர்பாக சிசிடிவி கேமரா மூலம் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று வைரலாகி இருக்கிறது. அதில் அவர் கட்டிய லுங்கி, சக்கர நாற்காலியில் இருந்தபடியே செல்வது தெரிகிறது.

Advertisement