இழப்பீடு வழங்க தாமதப்படுத்தும் அரசு போக்குவரத்து கழகம்

ஸ்ரீவில்லிபுத்துார்; மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு தொகை வழங்குவதில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தாமதப்படுத்துவதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டிய சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை விருதுநகர் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் சரி செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்டோர் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் மோட்டார் வாகன விபத்துகளில் சிக்கி காயமடைவோர், உயிரிழப்பவர்கள் இழப்பீடு கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் கோருகின்றனர். இதில் சம்பவம் நடந்து ஒரு சில மாதங்களான பிறகு விபத்து இழப்பீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ஓரிரு ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது. இந்த தொகை பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பான பொருளாதார சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

இதில், நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் மேல் நீதிமன்றங்களில் அப்பீல் செய்கின்றனர். இதேபோல் அரசு போக்குவரத்து கழக நிர்வாகமும் இழப்பீடு வழங்க தாமதம் செய்கின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகி நிறைவேற்றதல் மனு செய்து ஜப்தி உத்தரவு பெறுகின்றனர். இதனையடுத்து நீதிமன்றம் ஊழியர்கள் பஸ்களை ஜப்தி செய்கின்றனர். ஆனாலும் அதன் பின்பும் இழப்பீடு தொகை வழங்குவதில் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் வழக்கு தொடர்ந்தவர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்துாரில் ரூ.31 லட்சம் இழப்பீடு வழங்குவதில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் தாமதப்படுத்தியதால் புத்தம் புதிய 2 மகளிர் இலவச பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது. அதன் பின்னும் இழப்பீடு தொகை வழங்க போக்குவரத்து கழக நிர்வாகம் தாமதம் செய்து வருகிறது. இத்தகைய நிலையை தவிர்க்க பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து இழப்பீடுகளை வழங்க அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் முன் வர வேண்டுமென பாதிக்கப்பட்டோர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement