பஸ்ஸில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு; கண்டக்டர், டிரைவர் தற்காலிக பணிநீக்கம்

சென்னை: ஓடும் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கண்டக்டர் மற்றும் டிரைவரை தற்காலிக பணிநீக்கம் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட் வெளியிட்ட அறிக்கையில்; உப்பிலிபாளையம் கிளையைச் சார்ந்த TN 38 N 3278 என்ற எண் கொண்ட பஸ், கடந்த மே 12ம் தேதி இரவு சேலத்தில் இருந்து புறப்பட்டு, குமாரபாளையம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது, முன்படிக்கட்டிற்குநேராக உள்ள 3 நபர்கள் அமரும் இருக்கையில் பயணம் செய்த ஆண் பயணி நல்ல தூக்கத்தில் இருந்த நிலையில், அவரது கையிலிருந்த 9 மாத ஆண் குழந்தை அவரது கையிலிருந்து நழுவி கீழே விழுந்துள்ளது. இது அவருக்கு தெரியவில்லை.


அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பயணி முன்படிக்கட்டு வழியாக ஏதோ விழுந்ததாக தெரிவித்ததை அடுத்து, பஸ்ஸை நிறுத்தி பார்த்த போது குழந்தை விழுந்தது தெரியவந்தது. உடனே குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குழந்தை இறந்து விட்டது எனவும் தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக தேவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தூக்கத்தில் இருந்த தந்தையின் கவனக்குறைவாலும், பேருந்துவின் முன்பக்க கதவை மூடாத நிலையில் பேருந்தை இயக்கியதாலும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பஸ்ஸில் பணியில் இருந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரையும் தற்காலிக வேலை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement