துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு

5


புதுடில்லி: பாகிஸ்தானை ஆதரித்த துருக்கி, அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்த இந்திய சுற்றுலா பயணிகள், அதனை ரத்து செய்து வருகின்றனர். இந்த விகிதம் 250 சதவீதமாக உள்ளதாக சுற்றுலா நிறுவனம் தெரிவித்து உள்ளது.


இந்தியா - பாகிஸ்தான் மோதலில் பிற நாடுகள் அமைதி காத்த நிலையில், துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


கடந்த ஆண்டில் துருக்கிக்கு 3.3 லட்சம் இந்தியர்களும், அஜர்பைஜானுக்கு 2.43 லட்சம் பேரும் சுற்றுலா சென்று வந்தனர். இவ்விருநாடுகளுக்கான சுற்றலா பயணத்தை பலரும் தாங்களாவே ரத்து செய்து வருகின்றனர்.
பல சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், இவ்விரு நாடுகளுக்கும் செல்வதை தவிர்க்குமாறு இந்திய பயணியரை கேட்டு வருகின்றனர்.


இந்நிலையில் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனமான ' மேக் மை ட்ரீப்' வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்தவார நிகழ்வு காரணமாக இந்தியா சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதனால்,துருக்கி மற்றும் அஜர்பைஜான் செல்ல விரும்புபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 60 சதவீதம் குறைந்துள்ளது.
அதேபோல் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், அதனை ரத்து செய்வதும் 250 சதவீதமாக அதிகரித்து உள்ளது.


நமது நாட்டிற்கு ஆதரவாக நிற்கவும், ஆயுதப்படைகளை மதிக்கும் வகையில், பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, இந்த இரு நாடுகளுக்கும் அத்தியாவசியம் அல்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
இந்த இரு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கான விளம்பரங்கள் மற்றும் சலுகைகளை நிறுத்திவிட்டோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


இந்நிலையில் உ.பி., மாநில சுற்றுலா வழிகாட்டி கூட்டமைப்பு தலைவர் அஜய் சிங் கூறுகையில், அஜர் பைஜான் மற்றும் துருக்கிக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்தவர்களில் 15 ஆயிரம் பேர் ரத்து செய்துவிட்டனர் என்றார்.

Advertisement