சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்

38


புதுடில்லி: நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிந்து நதியை திறந்து விடுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ராணுவ தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்ட இந்தியா, பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு உட்பட பல அதிரடி முடிவுகளை எடுத்தது. அதில் ஒரு நடவடிக்கையாக, சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.


மேலும், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பாக்லிஹார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக அமைந்தது. மேலும், அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அளவுக்கான விளைவுகளை இந்த நடவடிக்கை ஏற்படுத்தியது.


இதனிடையே, கடந்த 12ம் தேதி இருநாடுகளிடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இருப்பினும், சிந்து நதி நீரை திறந்து விடப்போவதில்லை என்ற முடிவில் இருந்து இந்தியா மாறவில்லை.


பயங்கரவாதத்திற்கு ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.


முன்னதாக, பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்றும், தண்ணீரும், ரத்தமும் ஒன்றுநேர ஓட விட முடியாது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.


இந்த நிலையில், சிந்து நதி நீரை மீண்டும் திறந்து விடுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் நீர்வளத்துறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், தண்ணீர் நிறுத்தி வைத்திருப்பதால், நாட்டில் பல நெருக்கடிகள் உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, தண்ணீரை திறந்து விடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement